45ஆம் ஆண்டுப் பொதுக்கூட்ட அறிவிப்பு
தேதி: 01/07/2022
45ஆம் ஆண்டுப் பொதுக்கூட்ட அறிவிப்பு
மலேசிய இந்து சங்கத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் பின் வருமாறு நடைபெறும்.
நாள் நேரம் இடம் | : 24.7.2022 (ஞாயிறு) : காலை மணி 9.00க்கு : ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம், பன்டார் சன்வே Jalan PJS 7/13, Bandar Sunway, 46150 Petaling Jaya, Selangor |
நிகழ்ச்சி நிரல்:
- இறை வணக்கம் / எழுச்சிப் பாடல் / தேசியப் பண்
- வரவேற்புரை: விவேக நாயகி கௌரி தங்கையா PSI., தேசிய கௌ. பொதுச் செயலாளர்
- தலைமையுரை: மதிப்புமிகு ஸ்ரீகாசி டத்தோ ஆர். எஸ். மோகன் ஷான்PMW., JMW., AMK., BKM., PJK.
- சிறப்புரை
- விருதளிப்பு நிகழ்ச் சி
- மத்திய செயலவைக்கு பத்து (10) உறுப்பினர்கள் தேர்வு
- 31 டிசம்பர் 2022 வரைக்குமான கணக்காண்டுக்கு நிறுவனக் கணக்காய்வாளராக கும்புலான் நாகாவையே (AF 0024) மீண்டும் நியமித்தல் மற்றும் அவர்களின் ஊதியத்தை நிர்ணயிக்க இயக்குநர்களுக்கு அதிகாரம் வழங்குதல்.
- இரண்டு (2) உட்கணக்காய்வாளர்கள் நிர்ணயித்தல்.
- 44வது ஆண்டுப் பொதுக் கூட்ட குறிப்பை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுதல்.
- 2021ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுதல்.
- 2021ஆம் ஆண்டிற்கான தணிக்கைச் செய்யப்பட்ட கணக்கறிக்கையை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுதல்.
- சங்கத்தின் உள் மற்றும் வெளி தீர்மானங்கள் அங்கீகரித்து ஏற்றல்.
- ஏழு (7) நாட்களுக்கு முன்னதாக எழுத்து வடிவில் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளைப் பரிசீலித்தல்.
- நன்றியுரை இறை வணக்கம்
விவேக நாயகி கௌரி தங்கையா, PSI.
தேசிய கௌ. பொதுச் செயலாளர்
45ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய விதிமுறைகள்
ஆண்டுப் பொதுக்கூட்டம் நன்முறையில் நடைபெறும் வகையில், உறுப்பினர்கள் புரிந்து கொள்ளவும் கடைப்பிடிக்கவும் கீழ்க்கண்ட விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன.
- சட்டத்திட்டப் பிரிவு 9.4-இன் படி, மத்திய செயலவையின் தீர்மானத்தின்படி உறுப்பினர்களின் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு குறைந்தது இருபத்தியொன்று (21) நாட்களுக்குள் ஒரு (1) தமிழ் மற்றும் ஒரு (1) ஆங்கில நாளேடுகளின் மூலமாக அறிக்கை விடுக்க வேண்டும். இருப்பினும் குறுகிய காலத்திலான கூட்ட அறிக்கையாக இருப்பின் கூட்டத்திற்கு வருகை புரிந்த எழுபத்தைந்து சதவிகிதம் (75%) உறுப்பினர்களின் சம்மதத்துடன் நடைபெற வேண்டும்.
- சட்டத்திட்டப் பிரிவு 9.5-இன் படி, ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு குறைந்தது இருபத்தியொன்று (21) நாட்களுக்கு முன்னதாக, மத்தியச் செயலவையின் ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கையை சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் www.malaysiahindusangam.org வெளியிடப்படும் மற்றும் மாநில செயலவைகளில் அச்சிடப்பட்ட நகல் கிடைக்கப்பெறும்.
- ஆண்டுப் பொதுக்கூட்டம் சுமூகமாக நடைபெறும் வகையில், ஆலோசனை அல்லது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள் 7 நாட்களுக்கு முன்னதாக எழுத்து வடிவில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
- ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான தகுதிகள்:
அ) நன்கொடை, ஆயுள் மற்றும் சாதாரண உறுப்பினர்கள்.
ஆ) 2022 / 2023ஆம் ஆண்டு வரைக்குமான சந்தா பாக்கியை 15.04.2022-க்குள் செலுத்தியவர்கள்.
இ) ஆலயம் மற்றும் இயக்கங்கள். ஓர் ஆலயத்திலிருந்து அல்லது இயக்கத்திலிருந்து ஒரு பிரதிநிதி மட்டுமே கலந்து கொள்ள முடியும். கலந்து கொள்பவர், ஆலயம் அல்லது இயக்கத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் (Letterhead) பிரதிநிதிப்பவரின் முழு விவரத்தையும் தெரிவித்து அதிகாரப்பூர்வ முத்திரையிட்டு உடன் கொண்டு வர வேண்டும்.
ஈ) ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சந்தா ஏற்றுக் கொள்ளப்படாது.
மத்தியச் செயலவைத் தேர்தல் முன்மொழிதல்
அ) சட்டத்திட்டப் பிரிவு 6(பி)-இன் படி, சாதாரண உறுப்பினர் ஒருவர் மத்தியச் செயலவை உறுப்பினர் ஆக தகுதி பெற மாட்டார்.
ஆ) குறைந்தபட்சம் மூன்று (3) ஆண்டுகள் மாநில அல்லது வட்டார அளவில் ஏதாவது செயற்குழுவில் சேவையாற்றிய உறுப்பினர் மட்டுமே மத்தியச் செயலவையில் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி உடையவர்.
இ) ஓர் ஓய்வு பெறும் மத்தியச் செயலவை உறுப்பினர், அதிகபட்சம் தொடர்ச்சியாக இரண்டு (2) தவணை மறு தேர்தலுக்கு தகுதியுடையவராக இருக்கலாம். அதன் பிறகு, மூன்று (3) ஆண்டுகள் காலக்கழிவுக்குப் பின் மீண்டும் தேர்தலுக்குத் தகுதி பெறலாம்.
ஈ) மத்தியச் செயலவையினர் வட்டாரப் பேரவையில் பதவி வகிக்கக் கூடாது.
உ) உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சரும் நிறுவனப்பதிவு அதிகாரியும் ஒப்புதல் வழங்கிய சட்டத்திருத்தத்தின்படி, கடந்த 2002ஆம் ஆண்டு மத்தியச் செயலவைக்கு 27 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் 9 உறுப்பினர்கள் ஓய்வுப்பெற, 9 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஊ) மத்தியச் செயலவையிலிருந்து ஓய்வு பெறும் 9 உறுப்பினர்களுடன், மேலும் ஒருவர் காலமாகியுள்ளார். அவ்வகையில், மொத்தம் பத்து (10) உறுப்பினர்கள் மத்தியச் செயலவையிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். அவர்கள்:
- திரு. சி. எம். கோபாலன்
- டத்தோ செ.மதுரைவீரன்
- திரு. த.கணேசன்
- திருமதி. த.கௌரி
- திரு. சு.சுப்பையா
- குமாரி சா.மீனாட்சி
- திரு பாலசுப்ரமணியம் கருப்பையா
- திரு. மா. முணியாண்டி
- திரு. சு.விநாயகமூர்த்தி
- திரு. மா. ஜெயராமன்
எ) காலியாகும் 10 மத்தியச் செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு வேட்பாளர்களை முன்மொழிய விரும்புவோர், அதற்கான படிவங்களைச் சங்கத்தின் தலைமையகத்தில் வரும் 12.7.2022 முதல் 16.7.2022 வரை காலை 11.00-இல் இருந்து மாலை 4.00 மணி வரையில் பெற்றுக் கொள்ளலாம்.
ஏ) மத்தியச் செயலவையின் முடிவின்படி, தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்கள் ரிம.200-ஐச் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 16.07.2022 சனிக்கிழமை, காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிக்குள் தேர்தல் அதிகாரியிடம் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
ஏ) குறிப்பிட்டுள்ள நாள் / நேரத்திற்குப் பின் வந்து சேரும் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
ஐ) ஓய்வு பெறும் உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட தகுதியானவர்கள்.
ஒ) தேர்தல் அதிகாரி: கும்புலான் நாகாவைச் சேர்ந்த திரு. நாகராஜன்.
ஓ) வேட்பாளர்கள் பூர்த்திச் செய்யப்பட்ட பாரங்களில் தவறுகள் இருப்பின் அப்பாரங்களை நிராகரிப்பதற்கு தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.
தீர்மானங்கள்
- பொதுக்கூட்டத்தில் தீர்மானங்களைப் பரிசீலனைக்குக் கொண்டு வர விரும்பும் உறுப்பினர்கள், அவற்றை எழுத்து வடிவில் 18.07.2022ஆம் தேதிக்குள் தேசியக் கௌரவப் பொதுச் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- மத்திய பேரவையினால் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அனைத்து தீர்மானங்களும் ஆய்வுச் செய்யப்படும். ஏற்புடைய தீர்மானங்கள் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பரிசீலனைக்கு முன்வைக்கப்படும். தீர்மானங்களை நிராகரிக்கவோ அல்லது திருத்தம் செய்யவோ இக்குழுவிற்கு அதிகாரம் உண்டு. குழுவின் முடிவே இறுதியானது.
பொது
- பொதுக்கூட்ட தினத்தன்று, தேசியப் பாதுகாப்பு மன்றம் விதித்துள்ள அனைத்து செயல்பாட்டு தர விதிமுறைகளையும் (எஸ்.ஓ.பி) முழுமையாக பின்பற்றியுள்ள தகுதி பெற்ற உறுப்பினர்கள் தங்களுக்கான அடையாள அட்டையைப் காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
2. உறுப்பினர்கள் பதிவு காலை 11.00 மணிக்கு முடிவடையும்.
3. உறுப்பினர்கள் தங்களது அடையாள அட்டையை அல்லது உறுப்பினர் அட்டையை உடன் கொண்டு வர வேண்டும்.
4. 2022/ 2023 ஆண்டு வரைக்குமான சந்தா செலுத்திய ரசீதை உடன் கொண்டு வர வேண்டும்.
5. ஆண்டுப் பொதுக்கூட்டத்தன்று, சங்கம் வழங்கும் அடையாள அட்டையை உறுப்பினர்கள் கூட்டம் முடியும் வரை அணிந்திருக்க வேண்டும்.
6. உறுப்பினர்கள் இந்து பாரம்பரிய உடை அணிந்து கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
பின்பற்ற வேண்டிய செயல்பாட்டு தர விதிமுறைகள் (எஸ்.ஓ.பி)
- அனைத்து பங்கேற்பாளர்களும் முழு தடுப்பூசியைச் செலுத்தி இருக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை கலா மண்டபத்தின் நுழைவாயிலில் காட்ட வேண்டும்.
- கலா மண்டபத்தின் உள்ளே நுழைந்தப்பின் உறுப்பினர்கள் மைசெஜாத்ரா செயலியில் ‘கியூஆர் கோட்’ பதிவு செய்து, உடல் வெப்பத்தைப் பரிசோதனை செய்து, முறையான முகக்கவரி அணிவதோடு கைத்தூய்மியைப் பயன்படுத்த வேண்டும்.
3. எஸ்.ஓ.பி-யைப் பின்பற்றாத உறுப்பினர்கள் மண்டபத்தை விட்டு வெளியேற்றப்படுவர்.