தமிழ் நாகரிகத் தொன்மையையும் தமிழரின் கூர்த்த நுண்ணறிவையும் பறைசாற்றுவது சித்திரையில் மலரும் புத்தாண்டு!
காலம் தோற்றமும் முடிவும் இல்லாதது என்னும் தெளிவைக் காட்டுவது 60 ஆண்டுக் காலவட்டம்
மனிதர்களால் அளவிட முடியாதது காலம். அது முதலும் முடிவும் இல்லாதது. சைவ சித்தாந்தம் இறை, உயிர், தளை (கட்டு) ஆகிய மூன்றும் என்றென்றும் உள்ள பொருள்கள் என்று உறுதி கூறும்; இந்த மூன்றையும் முறையே பதி, பசு, பாசம் என்றும் கூறுவர்.
“பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற் பசு பாசம் அனாதி”
என்பது திருமூலரின் திருவாக்கு (திருமந்திரம்: முதல் தந்திரம்:4. உபதேசம் -3). இறைவனைப் போல, பசுவாகிய உயிர்களும், பாசமாகிய தளையும் என்றென்றும் உள்ள பொருள்கள், அதாவது அநாதியாக உள்ள பொருள்கள் என்று நிறுவுகிறார், திருமூலர்.
தளை அல்லது பாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று உட்பிரிவுகளை உடையது; காலம் என்பது மாயையில் உள்ள 36 தத்துவங்களில் ஒன்றாகக் கூறப்படுவது; எனவே, காலம் என்றென்றும் உள்ளது அதாவது, தோற்றமும் முடிவும் இல்லாதது என்பது தெளிவாகிறது. ‘காலங்கள் மூன்றானான்’ (6:4:4) என்றும், ‘காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்’ நின்றவன் (6:94:4) என்றும் இறைவனைப் பாடுவார் திருநாவுக்கரசு பெருமான்.
அளவிட முடியாத காலத்தை, கற்பம், மன்வந்தரம், யுகம், ஆண்டு, திங்கள், நாள், நாழிகை, வினாடி, தற்பரை என வகுத்த நம் முன்னோர், இந்த எல்லாக் கூறுகளுமே உலகம் சுழலுவது போல் உருண்டு, உருண்டு வரும் கூறுகளே என்பதை தெளிவாய் உணர்ந்திருந்ததோடு, அந்த உண்மையை நாமும் உணரும் வண்ணம் கால வாய்பாடை விட்டுச் சென்றனர்; அதாவது, 71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்தரம் என்றும், நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம் என்றும், 365 நாள் 15 நாழிகை, 31 வினாடி, 15 தற்பரை கொண்டது ஓர் ஆண்டு என்றும் காலத்தின் அனைத்துக் கூறுகளும் அடங்கிய வாய்பாடைத் தந்து சென்றார்கள் (60 தற்பரை = ஒரு வினாடி; 60 வினாடி = ஒரு நாழிகை; 60 நாழிகை = ஒரு நாள்).
இந்தக் காலக் கூறுகள் அனைத்தும் உருண்டு உருண்டு வருபவை. ‘நாள்’ என்பதை எடுத்துக்கொண்டால், இரவும் பகலும் மாறி மாறி வருவது; இரவு மட்டுமே நிலைத்து நின்றுவிட்டாலோ, அல்லது ‘பகல்’ மட்டுமே நிலைத்து நின்றுவிட்டாலோ, ‘நாள்’ என்னும் காலக்கூறு ஒன்று இருப்பதற்கு வழியில்லை. இதுபோலவே, வாரம், மாதம், ஆண்டு என அனைத்துக் காலக்கூறுகளுமே சுழல்முறையில் வருபவையே. இதைவிடுத்து, ‘காலம்’ என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் தோன்றி, பின்னொரு குறிப்பிட்ட நாளில் மறைந்து ஒழியும் என்று கூறுவதற்கு நம்மால் இயலாது; ஏனெனில், காலம், தோற்றமும் முடிவும் இல்லாதது!
அளவிட முடியாத காலத்தை, நம் தேவைக்காக, சுழன்று சுழன்று வரும் பெரிய காலக் கூறுகளாகவும், சிறிய காலக்கூறுகளாகவும் வகுப்பதே நம்மால் முடிந்த ஒன்று என்னும் தெள்ளத் தெளிந்த நுண்ணறிவைக் கொண்டிருந்தார்கள், தமிழர்கள் உட்பட இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள். எனவே, மற்ற நாட்டினர், தங்கள் நாகரிகத்திற்கு வழிவகுத்த ஒரு முன்னோடியின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, தங்கள் ஆண்டுக் கணக்கைத் தொடங்கும் நிலையில், கூர்த்த நுண்ணறிவு கொண்ட நம் இந்தியத் துணைக் கண்டத்தினர், கடவுளைப் போல் என்றென்றும் உள்ள காலத்தையும் அளவிட முடியாது என்னும் உண்மையை உணர்ந்து, பெரிய அளவிலும் சிறிய அளவிலும் உள்ள கால வட்டத்தைப் பயன்படுத்தினார்கள்; அதன் காரணமாக, அறுபது ஆண்டுகள் கொண்ட காலச் சக்கரத்தைப் பயன்படுத்தும் பெருமையை நாம் கொண்டுள்ளோம்.
தொன்மையான நாகரிகங்கள் என்று கூறப்படுபவை, எகிப்திய – சீன – இந்திய நாகரிகங்களாகும். இம்மூன்றுள், காலத்துக்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும், இன்னும் பழமையான மரபுக் கூறுகளைத் தொடர்ச்சியாகப் பேணிவருபவை என்னும் பெருமைக்கு உரியவை, கிழக்கத்திய நாகரிகங்களாகிய சீன-இந்திய நாகரிகங்களாம். கிழக்கத்திய நாகரிகங்கள் என்னும் ஒற்றுமை இருப்பதற்கேற்ப, இவ்விரு நாகரிகங்களுமே 60 ஆண்டு வட்டத்தைத் தம் காலக் கணிப்பில் கொண்டுள்ளன.
சீன மக்களுக்கும் 60 ஆண்டுக் கால வட்டம் இருப்பதை நம்மில் பெரும்பாலோர் உணர்ந்திருக்க மாட்டோம். விலங்குகளின் பெயரில் பன்னிரண்டு ஆண்டுகள் சுழன்று வருவதை அனைவரும் அறிவோம்; பன்னிரண்டு விலங்குகளின் பெயரில் சுழன்று வருபவை, பூமி சார்ந்த கிளைகள் (earthly branches) என்று அழைக்கப்படுகின்றன; மரம் (wood), நெருப்பு (fire), மண்/பூமி (earth), உலோகம் (metal), நீர் (water) எனப்படும் ஐந்து அடிப்படை பொருள்களும் வானம் சார்ந்த தண்டுகள் (celestial/heavenly stems) எனப்படுகின்றன. பன்னிரண்டு விலங்குகள் ஒவ்வொன்றிலும், மரம், நெருப்பு, மண், உலோகம், நீர் ஆகிய ஐந்து வகைகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, ‘புலி’ எனும் விலங்கு, மண் புலி, மரப் புலி, உலோகப் புலி, நெருப்புப் புலி, நீர்ப் புலி என ஐந்து வகையை உடையது. பன்னிரண்டு விலங்குகள் ஒவ்வொன்றும் மேலும் ஐந்து வகையாகப் பகுக்கப்படும்போது, சீனப் பண்பாட்டிலும் 60 ஆண்டுகள் கிடைக்கப்பெறுகின்றன.
மரம், நெருப்பு, மண், உலோகம், நீர் ஆகிய இவ்வைந்தில் ஒவ்வொன்றிலும் நிலவு, பெண்மை போன்றவற்றோடு தொடர்புடைய ஒரு பகுதியும் (‘யின்’/yin), சூரியன், ஆண்மை போன்றவற்றோடு தொடர்புடைய மறு பகுதியும் ‘(யாங்’/yang), என இரண்டு பகுதிகள் உள்ளன. எனவே, வானம் சார்ந்த தண்டுகள் மொத்தத்தில் பத்து உள்ளன. பூமி சார்ந்த கிளைகளின் 12 கூறுகளும், வானம் சார்ந்த தண்டுகளாகிய 10 கூறுகளும், குறிப்பிட்டதொரு முறையில் இணைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட ஆண்டின் பெயர் பெறப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால், சீனப் பண்பாட்டில், 120 விதமான பெயருடைய ஆண்டுகள் இருப்பதை ஊகிக்க முடிகிறது.
சீனச் சகோதரர்களுக்கு 60 என்பதற்காக ஓர் அடிப்படை இருப்பது போல, இந்திய துணைக் கண்டத்தில் காணப்படும் 60 ஆண்டுக் கணக்குக்கும் அடிப்படை உண்டு. தேவர்களின் குருவாகப் போற்றப்படும் வியாழ பகவான் ராசிச் சக்கரத்தில் ஐந்து சுற்றுகளை முடிப்பது 60 ஆண்டுக் காலமாகும். நாம் சோதிடம் பார்க்கும்போது, நமக்கு எந்தத் திசை நடக்கிறது என்று சோதிடர்கள் சொல்லக் கேட்டிருப்போம். ஒரு மனிதனின் வாழ்வில் ஒன்பது திசைகளும் முழுமையாக இடம்பெற 120 ஆண்டுகளாகும். பஞ்சாங்கம் கணிப்பதற்கு முக்கிய அடிப்படை நூலாக விளங்கும் ‘சூரிய சித்தாந்தம்’, நட்சத்திரங்கள் தங்கள் சஞ்சாரப் பாதையில் ஒரு சுற்றை முடிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் 60 ஆண்டுகளாகும் என்று கூறுகிறது. இந்நூல், வராகமிஹிரர் என்பவரால் கி.பி.500களில் இயற்றப்பட்டது என்பது அறிஞர்களின் துணிபு. தமிழர்களின் வாழ்வில் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் மிகவும் சிறப்பாக, 60ஆம் கலியாணமாகக் கொண்டாடப்படுவதிலிருந்து தமிழர்கள் 60 என்னும் கால வட்டத்திற்குக் கொடுக்கும் தனிப்பட்ட சிறப்பு தெளிவாக விளக்கம் பெறுகிறது.
காலத்தை உருண்டு உருண்டு வரும் பெரிய கால வட்டங்களாகவும் சிறிய கால வட்டங்களாகவும் வகுத்து, கால ஓட்டத்தைப் பதிவு செய்த திறன், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்து சென்ற சமய ஞானிகளின் கூர்த்த நுண்ணறிவை – இறையருளால் அவர்களுக்குக் கிடைத்த மெய்யறிவுத் திறத்தைப் பறைசாற்றுகிறது.
வரலாற்றுக்கு முந்தைய தமிழ் நாகரிகத்தின் தொன்மையை நிலைநிறுத்துவது 60 ஆண்டுக் காலவட்டமே!
சுழன்று வரும் கால வட்டமாகக் காலத்தைக் கணித்துப் பயன்படுத்துவதில் மற்றுமொரு பெருஞ் சிறப்பு, குறிப்பாக தமிழர்க்கு உண்டு. ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி’ என்னும் தொடர் தமிழ் நாகரிகத்தின் அளவிடற்கரிய தொன்மையைச் சுட்டுகின்ற மணிமொழியாகும். குறிப்பிட்ட ஒரு சான்றோர் காலத்திலிருந்து நமது காலத்தை அளவிடும்போது, நம் நாகரிகத்தின் தொன்மை கேள்விக் குறியாகிவிடும் வாய்ப்பு உண்டு! இன்று, கடைச் சங்க கால நூல்கள் மட்டும் நமக்குக் கிடைக்கின்றன என்றாலும், அந்நூல்களின் அகச்சான்றுகளையும் வேறு சில குறிப்புகளையும் கொண்டு, முதல் தமிழ்ச் சங்கம், இரண்டாம் தமிழ்ச் சங்கம், மூன்றாம் தமிழ்ச் சங்கம் (கடைச் சங்கம்) என மூன்று சங்கங்கள் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் தமிழர்கள் என்று நிறுவிப் பெருமைப்படுகிறோம். கடைச் சங்க காலத்திலிருந்து காலத்தை அளவிடத் தொடங்கினால், முதற்சங்கம், இடை சங்கம் ஆகியவை கற்பனைப் புனைவுகள் ஆகிவிடும்!
வாழ்க்கையின் நல்ல கட்டத்தைக் குறிக்கும் ‘வசந்த காலத்தின்’ தொடக்கத்தில் புத்தாண்டு பிறப்பது, மிகவும் பொருத்தமானது
ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்துக் கூறும் தொல்காப்பியம். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியவையே அந்த ஆறு பருவங்கள். இவற்றுள், சித்திரையும் வைகாசியும் இளவேனில் காலம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக வெப்பமும் அதிக குளிரும் இல்லாமல் மரஞ்செடிகொடிகள் பூத்துக் குலுங்க ஆரம்பிக்கும் காலம் இளவேனில் காலம். இது வசந்த காலம் என்றும் குறிக்கப்படும்.தமிழர் பண்பாட்டில் இனிய வாழ்க்கைக் கட்டத்தை வசந்த காலமாக குறிப்பிடுவது மரபு. எனவே, புதிய ஆண்டை வசந்த கால ஆரம்பத்தோடு ஆரம்பித்த நம் முன்னோரின் இயற்கையோடு ஒட்டிய வாழ்வியல் நோக்கு புலப்படுகிறது.
தமிழ் நாடு, பாண்டிச்சேரி, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், ரியூனியன் தீவு, மொரீஷியஸ் போன்ற தமிழர் வாழும் இடங்களில் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் சித்திரை முதல் நாளாகிய ஏப்ரல் 13ஆம் அல்லது 14ஆம் நாளை அஸ்ஸாம், வங்காளம், கேரளா மணிப்பூர், ஒரிஸ்ஸா, பஞ்சாப், திரிபுரா ஆகிய நாடுகளும் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றன என்பது கவனித்தற்குரியது; இது தவிர, நேப்பாளம், வங்காள தேசம், பர்மா, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய கிழக்கத்திய நாடுகளில் எல்லாம் ஏப்ரல் மாதத்தில், இந்தக் கால கட்டத்திலேயே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இக்காலகட்டம் பகலும் இரவும் சமமாக இருக்கும் இரண்டு நாள்களில், சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும்போது, இரவும் பகலும் சமமாக இருக்கக்கூடிய மார்ச் 21ஆம் நாளை ஒட்டி வருவதாகும். மார்ச் 21, பூமத்தியரேகைக்கு நேரே சூரியன் நிற்கும். இந்தியாவிற்கு மேலே சூரியன் நிற்கும் காலம் மார்ச் 21க்குச் சில நாள் பின்னரே நேரும். எனவே, இந்தியத் துணைக்கண்டத்துக்கு மேலே சூரியன் நிலவும்போது புது ஆண்டைக் கணக்கிடத் தொடங்கும் அடிப்படையையும் உணரமுடிகிறது; அதிலும் சூரியனின் வடக்குப் பயணத்தில் ஏற்படும் ‘இரவுபகல் சமமாக வரும் நாளான’ மார்ச் 21ஐ ஒட்டி புத்தாண்டு கொண்டாடப்படுவது நோக்கத்தக்கது. இந்து சமயச் சார்புடைய சமயங்கள், வடக்குத் திசையைத் தெய்விகத் திசையாகப் போற்றும்.
கிழக்கத்திய நாடுகளில் பல, ஏப்ரல் நடுப்பகுதியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு, அன்றே சீனா வரை தமது பண்பாட்டைக் கொண்டு சென்ற நம் இந்துப் பெரு மக்களும் ஒரு காரணமாக விளங்கியுள்ளார்கள் என்று கூறிப் பெருமைப்படலாம்
மேட ராசியே ராசிச் சக்கரத்தின் முதல் ராசி என்பது பழந்தமிழ் இலக்கியங்களிலும் உணர்த்தப்படுகின்றது
சோதிட அடிப்படையில் பார்த்தாலும், சித்திரையே ஆண்டின் முதல் நாள் என்னும் நியாயம் வெளிப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளில் சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன எனும் அடிப்படையில் கணிக்கப்பட்டு வரையப்படுவது, சோதிடக் கணிப்புக்கு அடைப்படையாக விளங்கும் ராசிச் சக்கரம். இந்தக் கணிப்பில், சூரியன் மேட ராசியில் தொடங்கி, மற்ற ராசிகளை முழுமையாகச் சுற்றி முடிக்கும் கால கட்டமே ஓர் ஆண்டு என வரையறுக்கப்பட்டுள்ளது; அதாவது, பன்னிரண்டு ராசிகளில், மேட ராசியே முதலாவதாகக் கொள்ளப்படுகின்றது. இந்த உண்மையைச் சங்க கால புலவர்களும் உணர்ந்து இருந்தனர்.
‘பத்துப்பாட்டு’த் தொகுப்பில் ஒரு நூலான ‘நெடுநல்வாடை’யில், “திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக; விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து” என வரும் அடிகள் (160-161), சூரியன், திண்ணிய கொம்புகளைக் கொண்ட ‘ஆடு’ ஆகிய மேடத்திற்கு உரிய ராசியை முதன்மையாகக் கொண்டு, வான மண்டலத்தில் பவனி வருவது குறிக்கப்பட்டுள்ளது. புறனானூறு 229ஆம் பாடலிலும் இத்தகைய குறிப்பு உளத;.“ஆடு இயல் அழல் குட்டத்து” (முதல் அடி) என்னும் அடி ‘மேடராசியைப் பொருந்திய கார்த்திகை நாளில் முதற்காலின் போது’ எனும் பொருளுடையது. இந்த அடி தொடர்பாக, ஔவை
சு. துரைசாமி பிள்ளையவர்கள் கொடுத்துள்ள விளக்கம் வருமாறு: “அழல் சேர் குட்டம் என்பது கார்த்திகை நாள். ‘அக்கினியை அதிதேவதையாக உடைமையின், கார்த்திகைக்கு அழல் என்பது பெயராயிற்று’ என்ப. ஆட்டினை, வடநூலார் மேடராசியென்பர். ஆடு முதல் மீன் ஈறாகவுள்ள இராசி பன்னிரண்டுக்கும் அசுவினி முதல் இரேவதி ஈறாகவுள்ள நாள் இருபத்தேழினையும் வகுத்தளிக்கின், முதல் இரண்டே கால் நாள் ஆடாகிய மேடத்துக்குரிய ஆதலின், கார்த்திகையின் முதற் காலை ‘ஆடு இயல் அழற்குட்டம்’ என்றார்.”
மேலே கண்ட இரு சான்றுகளும் தமிழர்கள் தமக்கென சோதிடக் கலைச் சொற்களை கொண்டு விளங்கிய பெருமை புலப்படுகிறது. தமிழ்க் கலைச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தாலும், அனைவருக்கும் பொதுவாய் இயங்கும் வானியல் நிலையைத் தெளிவாக உணர்ந்திருந்ததால், மேட ராசியையே சூரியனின் வட்டப் பாதை தொடங்கும் ராசியாகக் கொண்டு, தமிழரின் சிறப்பு நாள்களைக் கணித்தார்கள்; அவ்வகையில் சூரியன் முதல் ராசியில் புகும் நாள் தமிழரின் புதிய ஆண்டு தொடங்குவதாயிற்று.
சமயத் தத்துவ அடிப்படை, சூரியனின் நிலை, பருவ காலங்களின் அடிப்படை, சோதிட அடிப்படை என எந்த அடிப்படையில் பார்த்தாலும், இந்திய துணைக் கண்டத்தைச் சார்ந்த மக்களின் நாகரிகத் தொன்மையையும், அளவிட முடியாத காலத்தின் தன்மையை நன்குணர்ந்திருந்த அவர்களின் கூர்த்த நுண்ணறிவையும் படம்பிடித்துக் காட்டி, இந்திய பாரம்பரியத்தின் பெருமையை நிலைநிறுத்துவது சித்திரையில் மலர்ந்து மணம் பரப்பும், புத்தாண்டு என்பது தெளிவாகிறது; இந்தப் பெருமை, தமிழர்களுக்கும் உரிய பெருமை என்பதால், சித்திரைப் பிறப்பை, ‘தமிழ்ப் புத்தாண்டே வருக!’ என்று நெஞ்சார இருகரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வர வேற்போம்; நம் பெருமையை உறுதிப்படுத்துவோம்!