கலியுகத் துன்பத்தைத் தீர்க்கவல்ல கந்த புராணம் – 3
என்றும் உள்ள உண்மைகளைக் காலத்துக்கேற்ற இலக்கிய வடிவங்களில் தருவது நம் இந்து சமயம் !
நம் சமயக் கொள்கைகளை நன்கு புரிந்துகொண்டு சீராக வாழ விரும்புவோரே!
உங்கள் அனைவரதும் உயரிய தேடலுக்கு நன்றிகலந்த வணக்கங்கள்!
கலியுக வரதன் கந்தப் பெருமானின் புகழ் பாடும் கந்த புராணத்தைத் தமிழில் ஆக்கித் தந்த கச்சியப்பரின் வரலாற்றையும் நூலின் வரலாற்றையும் கண்டு கொண்டிருக்கிறோம். கந்தப்பெருமான் கச்சியப்பரின் கனவில் தோன்றி அவருக்குக் கட்டளையிட்டு அருளியது போல, கச்சியப்பர் கந்த புராணத்தைத் தமிழில் ஆக்கி முடித்து அதனை முறைப்படி அரங்கேற்றத் தொடங்கினார். அரங்கேற்றத்தின் முதல் படியாக, விநாயாகர் காப்பின் முதல் அடியான ‘திகட சக்கரச் செம்முக மைந்துளோன்’ எனும் அடிக்குப் பொருள் கூறியபோது, ‘திகழ்+தசம்’ என்பது ‘திகடசம்’ என்று இணைவதற்கு இலக்கணத்தில் விதி இல்லை என்று அவையில் இருந்த ஒரு புலவர் ஐயம் எழுப்பியதைக் கண்டோம். இந்தப் பிரச்சனையைக் கச்சியப்பரின் சார்பில், முருகப் பெருமான் எப்படித் தீர்த்துவைத்தார் என்று இன்று காண்போம்.
புலவர் எழுப்பிய ஐயம் நியாயமானது என்றாலும், அந்த அடி முருகப் பெருமானால் அருளப்பட்டது என்றார், கச்சியப்பர். அந்தப் புலவர் புன்முறுவல் பூத்து, ‘திகடசம்’ என்னும் சொல்லுக்கு இலக்கண விதி காட்ட வேண்டும் அல்லது முருகப் பெருமானே நேரில் வந்து உறுதிப் படுத்த வேண்டும்; இல்லையேல், நூலை அரங்கேற்ற முடியாது என்றார். புலவர் கூறிய இரண்டு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று மறுநாள் நிறைவேற்றப்படும் என்று கூறிவிட்டு, கச்சியப்பர் தன் இல்லம் திரும்பினார்.
அன்று இரவு உணவு உண்ணாமல், இரவு பூசை முடிந்ததும், திருக்கதவைத் திருக்காப்பிட்டுவிட்டு, சந்நிதியின் அருகிலேயே தரையில் படுத்துக்கொண்டார். அப்போது கந்தப் பெருமான் கச்சியப்பரின் கனவில் தோன்றி, ‘சோழ நாட்டில் வீரசோழியம் என்று ஒரு நூல் உண்டு; அதில் சந்திப் படலத்தில் பதினெட்டாம் செய்யுளில் ‘திகழ்+தசம்’ என்பது ‘திகடசம்’ என்று இணைவதற்கான விதி உண்டு; நாளை அந்நாட்டுப் புலவன் ஒருவன் அந்நூலைக் கொண்டுவந்து குறிப்பிட்ட விதியை அனைவருக்கும் காட்டுவான்’ என்று திருவாய்மலர்ந்து மறைந்தருளினார்.
மறுநாள் சபை கூடியபோது, கச்சியப்பர் முருகக் கடவுள் தம் கனவில் தோன்றி அருளியது பற்றி அறிவித்தார். அப்போது ஒரு புலவர், கையில் ஒரு புத்தகத்தை ஏந்தியவாறு அங்கு வந்தார். அவரை யார் என்றும் அவர் கையில் உள்ள புத்தகம் யாது என்றும் அங்குள்ளோர் வினவ, தான் சோழநாட்டவர் என்றும், தன் கையில் வைத்திருப்பது வீரசோழியம் என்னும் நூல் என்றும் விடை அளித்தார் வந்த புலவர். அப்போது, ’திகடசம்’ பற்றிய தமது சந்தேகத்தை எழுப்பிய புலவர் விரைந்து வந்து அந்த நூலை வாங்கி, சந்திப் படலத்தில் பதினெட்டாம் செய்யுளை வாசித்து, ‘திகட சக்கரம்’ என்று சொற்கள் சேர்வதற்குரிய விதி அதில் கூறப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். மற்றப் புலவர்களும் ஒவ்வொருவராக அதைப் பார்த்து மகிழ்ந்தார்கள். கொண்டுவந்த நூலைக் கச்சியப்பரிடம் கொடுத்த சோழ நாட்டுப் புலவர், ‘உங்கள் சந்தேகம் தீர்ந்ததா தீர்ந்ததா’ என்று கேட்டுக்கொண்டே மறைந்தருளினார்.
வந்தவர் முருகப் பெருமான் என்று உணர்ந்து, கச்சியப்பரிடம் மன்னிப்பு கேட்டு, புராண அரங்கேற்றத்தைத் தொடருமாறு கூறினர் அவையினர். புராண அரங்கேற்றம் ஓர் ஆண்டு நடைபெற்றது. அச்சமயத்தில் தேவைப்பட்ட உணவு முதலியவற்றுக்கான பணம் காஞ்சிநகரத்து 24 கோட்டங்களின் பிரபுக்களால் வழங்கப்பட்டது. அரங்கேற்றம் முடிந்தவுடன் கச்சியப்பர் நூலுக்கு முறைப்படி அர்ச்சனை செய்து வணங்கினார். அதன் பின்பு மற்றவர்கள் கச்சியப்பரையும் நூலையும் தந்தத்தால் ஆகிய சிவிகையில் ஊர்வலம் கொண்டு வந்து சிறப்பித்தார்கள். கச்சியப்பர் நூலைக் குமரகோட்ட சந்நிதியில் கந்தப் பெருமானின் திரு முன்னே வைத்து வணங்கினார். இதுதான் தமிழில் கந்த புராணம் தோன்றிய வரலாறு.
வடமொழி ஸ்காந்த புராணத்தின் குறிப்பிட்ட பகுதியைத் தமிழில் ஆக்குமாறு கச்சியப்பருக்கு ஆணையிட்ட முருகன், முதல் அடியை எடுத்துக் கொடுத்ததுடன், கச்சியப்பருக்குச் சவால் ஏற்பட்ட போது, கனவில் தோன்றி, குறிப்பிட்ட புலவர் எழுப்பிய ஐயத்திற்கான தெளிவு, சோழ நாட்டு நூல் ஒன்றில் உள்ளது என்று கூறி, அடுத்த நாள் ஒரு புலவர் அந்த நூலோடு வந்து, தேவையான தெளிவைத் தருவார் என்று கூறியருளி, கச்சியப்பரின் கவலையைத் தீர்த்தருளினார். கனவில் கூறியது போல், தாமே சோழ நாட்டுப் புலவராக ‘வீரசோழியம்’ என்னும் நூலோடு வந்து, தேவைப்பட்ட இலக்கண விதியைக் காட்டியருளினார்
‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதை நூறு விழுக்காடு உணர்ந்து கடைப் பிடிப்பவர்கள் இந்து சமயச் சான்றோர்கள். ‘என் செயலாவது ஒன்றில்லை; அனைத்தும் உன் செயல் என்றறிந்தேன்’ எனும் தெளிவோடு வாழ்ந்தவர்கள் நம் சமயச் சான்றோர்கள். அத்தகைய தெளிவோடு, தங்கள் கடமைகளை எவ்விதச் சுணக்கமும் இல்லாமல் ஆற்றி வந்த அருளாளர்களையே தான் நினைத்த பணிகளைச் செய்வதற்குத் தேர்ந்தெடுத்தான், இறைவன். ‘உள்ளிருந்து உணர்த்துபவனும் இயக்குபவனும் இறைவனே’ என்னும் தெள்ளிய உணர்வுடனும், முழு ஊக்கத்துடனும் செயல்பட்ட அவர்களோடு துணை நின்று, என்றும் உள்ள உண்மைகளை காலத்திற்கேற்ற இலக்கிய வடிவங்களில் வழங்கி வந்துள்ளான் நம் இறைவன். ‘எல்லாம் அவன் செயல்’ என்னும் தெளிவுடன் நம் சான்றோர்கள் வாழ்ந்ததால், என்றும் உள்ள உண்மைகளைக் காலத்துக்கேற்ற இலக்கிய வடிவங்களில் படித்துணர்ந்து பயன் பெறும் பேற்றை நாம் பெற்றுள்ளோம். இந்து சமயக் கொள்கையின் தனி ஆற்றலே ஆற்றல்!