கலியுகத் துன்பத்தைத் தீர்க்கவல்ல கந்த புராணம் – 4
என்றும் உள்ள உண்மைகளை மக்களின் பக்குவதிற்கேற்ப, படிப்படியாக உணர்த்துவான் இறைவன்!
நம் சமயக் கொள்கைகளை நன்கு புரிந்துகொண்டு சீராக வாழ விரும்புவோரே!
உங்கள் அனைவரதும் உயரிய தேடலுக்கு நன்றிகலந்த வணக்கங்கள்!
இந்திய மண்ணில் ஆன்மிக சாதனையில் நாட்டம் செலுத்திய சான்றோர் அதிகமாக வாழ்ந்துள்ளார்கள்; வாழ்ந்து வருகிறார்கள். ‘வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டமதில் நானும் ஒருவன் அன்றோ’ என்பது இராமலிங்க வள்ளலாரின் கூற்று. இந்திய மண்ணுக்கு உள்ள இத்தகைய சிறப்பினால், இறைவன் இந்திய மண்ணில் வாழ்ந்த ஆன்மிகப் பெரியோர்களின் வழியாக, நம்மோடு துணைநின்று, காலத்தின் தேவைக்கேற்ப நம்மை வழிநடத்திச் செல்லக்கூடிய ஒரு பெரும்பேற்றை இந்துக்களாகப் பிறந்த நாம் பெற்றுள்ளோம் எனும் உண்மையைச் சென்ற வாரங்களில் கண்டோம்..
கந்த புராணம் பற்றிய அறிமுகக் கட்டத்தில் இன்னும் ஒரு கூறு எஞ்சி உள்ளது. கந்த புராணத்தில் காணப்படும் செய்திகளைக் கண்டு அவை நமக்கு உணர்த்தும் நுணுக்கமான சமயக் கோட்பாடுகளை உய்த்துணர்ந்து மகிழும் முன்பு, அந்த நூலின் அமைப்பைச் சிறிது அறிந்துகொள்ள வேண்டும் அல்லவா!
முந்தைய கட்டுரைகளில், முருகப் பெருமான் கனவில் தோன்றி கட்டளையிட்டதனால், கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தைத் தமிழில் பாடினார் என்று கண்டுள்ளோம். முருகப் பெருமான் கனவில் தோன்றி இட்ட கட்டளையை ஆறுமுக நாவலர் பெருமானும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் கூறியுள்ள முறையில் காண்பது என்றால், அக்கட்டளை பின்வருமாறு அமையும்: ‘அன்பனே! கந்த புராணத்து ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதல் காண்டமாகிய சிவரகசிய காண்டத்தில் உள்ள நமது சரித்திரத்தைக் கந்த புராணம் எனப் பெயரிட்டுத் தமிழிலே பெருங்காப்பியமாகப் பாடக் கடவாய்’.
இந்து சமயத்தில் உள்ள பதினெட்டு மகா புராணங்களில் ஒன்று ஸ்காந்த புராணம். இது பதினெட்டு புராணங்களில் மிகப் பெரியதாகும். இந்தப் புராணம் ஆறு சங்கிதைகளைக் கொண்டுள்ளது. சங்கிதை என்னும் சொல்லுக்கு ‘தொகுப்பு’, ‘வேத மந்திரம்’, ‘சரித்திரம்’ ஆகிய பொருள்கள் உள்ளன. இங்கு நமக்கு உரியது சரித்திரம் எனும் பொருள் ஆகும். ஸ்காந்த புராணத்தில் உள்ள ஆறு பெரும் பிரிவுகளில் ஒன்று சங்கர சங்கிதை. அது சம்பவ காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம், உபதேச காண்டம் என ஏழு காண்டங்களை உடையது.
முருகப் பெருமான், வடமொழியில் உள்ள ஸ்காந்த புராணத்தில், சங்கர சங்கிதையில் உள்ள தன் சரித்திரத்தைப் பாடுமாறு கச்சியப்ப சிவாச்சாரியாரை பணித்து மறைந்தருளியபோது, கச்சியப்பர் சங்கர சங்கிதையில் உள்ள ஏழு காண்டங்களில் முதல் ஆறு காண்டங்களை மட்டும் தமிழில் பெயர்த்தார். அவரது கந்த புராண நூலில் உள்ள ஆறு காண்டங்களின் விவரத்தைக் காண்போம். ஆறு காண்டங்களும் அவற்றில் அடங்கியுள்ள படலங்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு: உற்பத்திக் காண்டம் – 26 படலங்கள், அசுர காண்டம் – 43 படலங்கள் , மகேந்திர காண்டம் – 21 படலங்கள், யுத்த காண்டம் – 16 படலங்கள், தேவ காண்டம் – 5 படலங்கள், தட்ச காண்டம் – 24 படலங்கள். திருக்கயிலாய படலத்தில் ஆரம்பித்து வள்ளி திருமணப் படலத்தில் மங்களகரமாக முடிவடைகிறது கச்சியப்பரின் கந்த புராணம்.
இங்கு ஒரு சிறிய கேள்வி. முருகப் பெருமான் சங்கர சங்கிதையில் உள்ள தன் வரலாற்றைத் தமிழில் பாடுமாறு பணித்தார். கச்சியப்பர் சங்கர சங்கிதையின் ஏழு காண்டங்களில் ஏழாவதான உபதேச காண்டத்தை விடுத்து, முதல் ஆறு காண்டங்களையும் தமிழில் தந்தார். ஏன்? ஏழாவதாகிய உபதேச காண்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், அதில் சூரர்களின் முந்தைய வரலாறுகளும் அப்போது அவர்களுக்கு முருகப் பெருமானோடு ஏற்பட்ட அனுபவமும், சிவ வழிபாடு தொடர்பான விவரங்களும் என பல பயனுள்ள விவரங்கள் உள்ளன. ஆனால், அவை சூரபத்மனையும் அவனது கூட்டத்தினரையும் ஒடுக்குவதற்காக முருகப் பெருமான் ‘ஆறுமுகக் கடவுளாகத்’ தோன்றிய வரலாற்றோடு நேரடித் தொடர்புடையன அல்ல. எனவே, கலியுகத் தேவைக்கு ஏற்ப, கலியுகத் துன்பத்திலிருந்து மக்களை விடுவிப்பதற்கெனத் தான் சிறப்பாக எடுத்த ஆறுமுக மூர்த்தத்தின் தெய்விக வரலாற்றை மட்டும் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் புரிந்துகொண்டு, மக்கள் பயன்பெறுவதற்கு வசதியாக, முருகப்பெருமான் ‘தமது வரலாற்றைப்’ பாடுமாறு நுணுக்கமாகக் கூறவே, அதைப் புரிந்துகொண்டு பாடியுள்ளார் கச்சியப்பர் என்று உணர முடிகிறது.
இராஜராஜ சோழனும் நம்பியாண்டார் நம்பியும் தில்லைக் கோவிலில் திருமுறைச் சுவடிகளில் பல செல்லரித்துப் போயிருப்பதைக் கண்டு வருந்தியபோது, ‘மூவர் பாடல்……மண்மூடச் செய்தே ஈண்டு வேண்டுவன வைத்தோம்’ என்று அனைவரும் கேட்கும்படி வானில் ஒலி எழுந்தது என்று ‘திருமுறை கண்ட புராணம்’ கூறும் செய்தி, இங்குக் கவனிக்கத்தக்கது. காலத்திற்கேற்ற இலக்கிய வடிவத்தில் நிரந்தர உண்மைகளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு காலத்து மக்களின் ஆன்மிகத் தெளிவிற்கு ஏற்ப உண்மைகளைப் பாகுபடுத்திக் கொடுக்கும் பேரருளையும் இறைவன் புரிகிறான் என்று உய்த்து உணரும்போது, ‘இறைவா, உன் கருணையே கருணை’ என்று போற்றி நிற்பதைவிட வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை அல்லவா!