இறைவன் பெறும் வடிவம் வேறு ; நாம் பெறும் வடிவம் வேறு !

நம் சமயக் கொள்கைகளை நன்கு புரிந்துகொண்டு சீராக வாழ விரும்புவோரே !
உங்கள் அனைவரதும் உயரிய தேடலுக்கு நன்றிகலந்த வணக்கங்கள் !

கந்த புராணம், வடமொழியிலிருந்து தமிழில் பெயர்க்கப்பட்ட  வரலாற்றையும், அந்த நூலினது முக்கியப் பகுதியின் அமைப்பையும் சுருக்கமாகக் கண்டோம்.  ஆறு காண்டங்கள் கொண்ட முக்கியப் பகுதிக்கு முன்பு, வழக்கமாக ஒரு காப்பியத்திற்கு இருக்க வேண்டிய பாயிரம், கடவுள் வாழ்த்து, அவையடக்கம், ஆற்றுப்படலம், திருநாட்டுப்படலம், திருநகரப்படலம், பாயிரப் படலம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆற்றுப்படலத்தில் பாலாறு போற்றப்படுகிறது; திருநாட்டுப்படலத்தில் தொண்டை நாடும், திருநகரப் படலத்தில் காஞ்சி மாநகரமும் போற்றப்படுகின்றன. இனி, நூலின் முக்கியப் பகுதிக்குள் நுழைவோம்.

முதலாவதாகிய ‘உற்பத்திக் காண்டத்தின்’ முதல் படலம், ‘திருக்கைலாய படலம்’; கந்த புராணம் சைவ நூல் என்பதைப் பறைசாற்றுவது போல் முதல் படலத்தின் பெயர் அமைந்துள்ளது. ஊழிக் காலத்திலும் அழியாத வெள்ளியங்கிரியாகிய திருக்கைலாசத்தில், நந்திதேவர் காவல் செலுத்தி நிற்கவும், சுற்றிலும் தேவர், முனிவர், சித்தர், கந்தருவர், கணநாதர் போன்ற அனைத்து அடியார்களும் தோத்திரம் செய்துகொண்டு இருக்கவும், அங்கிருந்த பொற்கோவிலில் சிவபெருமான் உமையம்மையுடன் வீற்றிருந்தருளினார்.

அத்தருணத்தில் உமாதேவியார் திடீர் என்று எழுந்து சிவபெருமானை வணங்கி, சிவனை அவமதித்த  தக்கனின் மகள் தாட்சாயினியாக சிலகாலம் வளர்ந்ததற்காக நொந்து, அவனிடத்தில் வளர்ந்த உடலையும் அதன் பெயரையும் நீக்கியருளி உதவுமாறு வேண்டினார். அதைக் கேட்ட சிவபெருமான், தனக்காக அல்லாமல், தனது பிள்ளைகளாகிய உயிர்களின் நற்கதிக்காகவே உமை அத்தகைய வரமொன்றைக் கேட்பதைத் தாம் அறிந்துள்ளதாகக் கூறி, இமயமலை அரசன், உமையம்மையைத் தன் மகளாக வளர்த்துத், தமக்குத் திருமணம் செய்து தர வேண்டும் என்று கடுந்தவம் இயற்றி வருவதை கூறி, அவனிடம் குழந்தை வடிவில் மகளாகச் சென்று வளர்ந்து, ஐந்து வயதில் தம்மை நோக்கித் தவம் புரியுமாறும், அப்போது தாம் உமையம்மையைத் மணம்புரிந்து, திருகைலாயத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறியருளுகிறார். சிவபெருமான் இவ்வாறு கூறியருளியதும், தாட்சாயினியின் உடல் காற்றில் சூடம் போல் கரைந்தது.  உமையின் உடல் ஞானமயமானது; எலும்பாலும் தோலாலும் இரத்தத்தாலும் ஆகியது அல்ல.

இமயமலையரசன் இமயமலை அடிவாரத்தில் உள்ல மானஸவாவி (இது ‘பத்மை’ என்றும் குறிப்பிடப்படுகிறது) என்னும் பெயருடைய தடாகத்தின் அருகில் தன் தவத்தை மேற்கொண்டிருந்தான். அரசன் காணும் வண்ணம், அந்தத் தடாகத்தில் உள்ள ஒரு தாமரை மலர் மேல் குழந்தை வடிவாய் எழுந்தருளியிருந்தார், தேவி. குழந்தையைக் கண்ட அரசன், உமையம்மை தன் பொருட்டு சிவபெருமானைப் பிரிந்து வந்தனள் போலும் என்று மகிழ்ந்து, வணங்கிக் குழந்தையை மென்மையாகத் தூக்கிஎடுத்துக்கொண்டு சென்று, தன் மனைவியாகிய மேனையிடம் கொடுத்தான். அன்புப் பெருக்கோடு குழந்தையைப் பெற்றுக்கொண்ட மேனை, அதனைக் கண் போல் போற்றிப் பாராட்டி வளர்த்தாள்.

உமாதேவியார், தமக்கு ஐந்து வயது ஆகியபோது, சிவபெருமானை நோக்கித் தவமியற்ற விரும்பும் தன் எண்ணத்தைத் தந்தையாரிடம் வெளியிட்டார். முதலில் சிறிய வயதைக் காரணம் காட்டி மறுத்த தந்தை, சிவனே அனைத்துயிரையும் காப்பவன் என்பதில் தெளிவாய் இருந்த மகளின் பக்குவத்தைப் பார்த்து, மலையின் ஒரு பக்கத்தில் ஒரு தவச்சாலையை அமைத்து, கன்னியர் பலரோடு தன் மகளைத் தவம் செய்ய அனுப்பிவைத்தான். உமையம்மை பற்றிய இந்தக் கதை, முதல் காண்டத்தில் இரண்டாவதாக அமைந்துள்ள ‘பார்ப்பதிப் படலத்தில்’ காணப்படுகிறது.

‘பார்ப்பதிப் படலத்தில்’ சைவ சித்தாந்தக் கொள்கை ஒன்று தெளிவாய் உணர்த்தப்பட்டுள்ளது. முட்டையில் தோன்றுவது, வியர்வையில் தோன்றுவது, விதையில் தோன்றுவது, கருப்பையில் தோன்றுவது என நான்கு வகையான பிறப்பை உடையவை உயிர்கள்; இறைவன் இந்நால்வகைப் பிறப்பிற்கும் அப்பாற்பட்டவன் என்பதே அது. தாட்சாயனியின் உடல் காற்றில் சூடம் போல் கரைந்தது, பார்வதி தேவி, தமது விருப்பத்தின் அடிப்படையில், தடாகத்துத் தாமரையில் ஒரு குழந்தை வடிவாகத் தோன்றி இருந்தது ஆகியவை இந்தக் கொள்கையை நன்கு விளக்கி நிற்கின்றன. தேவி தாட்சாயனியாகவும் பார்வதியாகவும் தோன்றியது அடியார்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் ஒரு காரணத்தை அடிப்படையைக் கொண்டிருந்தன. காரணமின்றிக் காரியம் இல்லை என்பதும் நம் சமயத்தின் உறுதியான கொள்கையாகும்.  ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ என்பர்; ஆனால், இறைவனின் ஒரு செயலின் வழியாக, பல நோக்கங்கள் நிறைவு
செய்யப்படுகின்றன. இத்தகைய திருவிளையாடலைப் புரிய,  இறைவனைத் தவிர வேறு யாரால் முடியும்?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *