தத்துவ நூல்களை நன்குக் கற்றுத் தேர்ந்தாலும், இறைவன் அருள் ஒன்றே முத்தியைக்  கொடுக்கும்!

நம் சமயக் கொள்கைகளை நன்கு புரிந்துகொண்டு சீராக வாழ விரும்புவோரே!
உங்கள் அனைவரதும் உயரிய தேடலுக்கு  நன்றிகலந்த வணக்கங்கள்!

கந்த புராண முதல் காண்டமாகிய ‘உற்பத்திக் காண்டத்தில்’ மூன்றாவதாக இடம்பெற்றுள்ள ‘மேரு படலம்” இறைவன் மற்றும் சமயம் தொடர்பான நுண்ணிய உண்மைகள் சிலவற்றைத் தெளிவாகச் சித்திரிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஐந்து வயது சிறுமியாக உமையம்மை இமயமலைச் சாரலில் தவமியற்றிக் கொண்டிருக்கையில், திருக்கைலையில் என்ன நடந்தது என்பதைக் காட்டுகிறது இந்தப் படலம்.

பிரம்மனின் கருத்தில் தோன்றிய மானசிகப் புதல்வர்கள் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர். தன் படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு தன்னோடு இருக்குமாறு பிரம்மன் கூறுகிறார். அவர்கள்  ‘பாசமாகிய சிறையில் அகப்பட்டு, படைத்தல் தொழிலாகிய விலங்கைப் பூட்டி கொள்ள மாட்டோம்; ஆனந்தமே வடிவாகிய சிவபெருமானின் திருவடிகளை அடைவோம்’ என்று கூறி இறைவனை நோக்கித் தவம் செய்தார்கள். முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளுக்கும் சிறிதளவு பாசம் உண்டு எனும் உண்மை இங்குச் சுட்டப்படுகிறது; மும்மூர்த்திகளிடம் அதிகார மலம் உண்டென்பது சித்தாந்தத் துணிபு. இவர்களுக்கெல்லாம் மேம்பட்ட முழுமுதல் தெய்வம் சிவபெருமான். தம்மை நோக்கித் தவமியற்றிய முனிவர்களின் விருப்பத்திற்கேற்ப, திருக்கைலாயத்தின் தெற்கே இருந்த கல்லால மரத்தடியில் தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியிருந்து, வேதப்பொருளை உபதேசித்து மறைந்தருளினார், இறைவன்.

வேதங்களை நன்கு கற்றிருந்தாலும், அவர்களுக்கு உண்மை ஞானமும் அதனால் வரும் மனச் சாந்தியும் கிடைக்கவில்லை. எனவே, பூமியில் வந்து மேலும் சிவனை நோக்கித் தவமிருந்து, சிவனருளாலே திருக்ககைலாயத்தை அடைந்து, நந்திதேவரின் அனுமதியோடு சிவபெருமானின் திருமுன் வந்தார்கள். இறைவனைப் பலவாறாக வணங்கித் துதித்து, தங்கள் குறையைத் தீர்த்து அருள்புரியுமாறு வேண்டி நின்றனர். அவர்களுடைய பக்குவ நிலையைக் கண்ட சிவபெருமான், அவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டார். நந்திதேவரை நோக்கி, மன்மதனன்றி மற்றத் தேவர்கள் யாரையும் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது என்று கட்டளையிட்டார். பின்பு,  நான்கு முனிவர்களுக்கும் ஆகமங்களில் கூறப்படும் சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றையும் விளக்கியருளி, நான்காவதான ஞானத்தை வாயால் விளக்க முடியாது என்றும்,  சும்மா இருப்பதே அதற்கான விளக்கம் என்றும் கூறி, தமது ஒரு கையைத் தம் நெஞ்சின் முன்னே வைத்து, மௌன முத்திரையைத் தாங்கி யோகத்தில் அமர்ந்து, மௌன நிலையைக் காட்டியருளினார். அதைக் கண்ட நான்கு முனிவர்களும் தங்கள் தங்கள் உள்ளம் ஒடுங்கப் பெற்று, சிவஞானம் பெற்று, சித்திரப்பாவை போல் எவ்வித அசைவும் இல்லாமல் இருந்தனர்

மௌன முத்திரை என்பது சின்முத்திரை என்றும் அழைக்கப்படும். நம் கையில் உள்ள ஐந்து விரல்களில், நான்கு விரல்கள் ஒரு பக்கமும், கட்டை விரல் / பெருவிரல் தனித்து ஒரு பக்கமுமாக அமைந்துள்ளன. தனித்து நிற்கும் பெருவிரல், பதியாகிய முழுமுதற்பொருளைக் குறிக்கிறது. ஆள்காட்டி விரல் உயிரைக் குறிப்பது; நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் ஆகியவை முறையே ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களைக் குறிக்கின்றன. உயிர்களை இந்த உலக வாழ்வில் கட்டிப்போட்டு, அவை இறையருளை நாடுவதற்குத் தடையாக விளங்குபவை இம்மலங்கள்.இவை ‘பாசம்’ என்றும் ‘தளை’ / ‘கட்டு’ என்றும் அழைக்கப்படும். உயிர்கள் இறையருளால் தங்களிடம் உள்ள இந்தக் குற்றங்களிலிருந்து நீங்கி,  இறையுணர்வில் முழுமையாக ஒன்றுபட்டு நிற்கும் நிலையை உணர்த்துவது இந்த முத்திரை

எவ்வளாவுதான் உண்மை நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தாலும்,  இறைவன் அருள் ஒன்றால் மட்டுமே மெய்யுணர்வு நிலையாகிய நிலைத்த பேரின்ப நிலையை அடைய முடியும் என்னும் பேருண்மை நான்கு முனிவர்களின் வாயிலாக நன்கு உணர்த்தப்பட்டுள்ளது. இதைத்தான் ‘சும்மா இருத்தல்’ என்பார்கள். இறையுணர்வில் ஆழ்ந்துள்ள பேரின்ப நிலையில், பேச்சுக்கோ சொல்லுக்கோ இடம் இல்லை. முருகப் பெருமானின் அன்பாகிய பேரருளால் தனது ஆசை எனும் விலங்கு தூள் தூளாகிய பின்பு, தனக்கு ’பேசாத அனுபவம்’ வந்தெய்தியது என்று கூறுவார் அருணகிரிநாதர். ‘மோனம் என்பது ஞான வரம்பு’ என்பது ஔவைப் பாட்டியின் கூற்று.

சின்முத்திரையின் அரிய பொருளை ஒரு சிறிதாவது உணர்ந்த நிலையில், தட்சிணாமூர்த்திப் பெருமானின் திருவுருவத்தின் முன் நின்று வணங்கும் போது, ‘உன் அருள்வழி நிலையான இன்பநிலையைப் பெறுவதற்கு ஏதுவாக அடியேனிடம் உள்ள குற்றங்களிலிருந்து அடியேன் நீங்குவதற்கு அருள் புரிவாய் இறைவா” என்று வேண்டுவதுதான் நியாயமானது என்னும் உணர்வு இயல்பாகவே நம்மிடம் தோன்றுகிறதல்லவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *