உலகம் தொடர்ந்தியங்க போக வடிவமாம் சிவசக்தி வடிவத்துடன் விளங்க வேண்டும் இறைவன்!

நம் சமயக் கொள்கைகளை நன்கு புரிந்துகொண்டு சீராக வாழ விரும்புவோரே !
உங்கள் அனைவரதும் உயரிய தேடலுக்கு  நன்றிகலந்த வணக்கங்கள்!

கந்த புராணத்தில் முதலாவதாக இடம்பெற்றுள்ள ‘உற்பத்திக் காண்டத்தின்’ மூன்றாம் படலமாகிய ‘மேரு படலத்தில்’ காணப்படும் நிகழ்ச்சிகளையும் அவை நமக்குணர்த்தும் அரிய உண்மைகளையும் கண்டு கொண்டிருக்கிறோம். உமையம்மை இமயமலைச் சாரலிலும், சிவபிரான் திருக்கயிலையிலும் தவ நிலையில் இருந்தனர். சிவபெருமான் இவ்வாறு யோகத்தில் ஆழ்ந்திருந்த ஒரு நொடியில், பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்களுக்குப் பற்பல யுகங்கள் கழிந்தன. தேவர்களின் ஒரு நாள் என்பது நமக்கு ஓர் ஆண்டு என நம் சமயச் சான்றோர்கள் அடிக்கடிச் சுட்டுக்காட்டுவது இங்கு நினைவுகூரத் தக்கது. ஓர் ஆண்டு எனப்படும் கால அளவும் அதைச் சார்ந்த மற்றக் காலக்கூறுகளின் அளவும் பூலோகம், தேவலோகம் முதலிய பல்வேறு உலகங்களில் மாறுபடும் என்பது சமய நூல்களிலிலிருந்து பெறப்படும் உண்மை.

சிவபெருமான் நிட்டையில் ஆழ்ந்தபோது, மன்மதன் இருந்தும் தேவர்களும் மனிதர்களும் இன்ப நுகர்வை மறந்திருந்தனர்; இதனால் பிரம்மாவின் தொழிலும் உயிர்களின் பிறப்பும் தடைப்பட்டன. சிவபெருமான் சக்தியோடு போக நிலையில் இல்லாவிட்டால், மன்மதனின் கரும்பு வில்லும் பூங்கணையும் பயன்படாமல் போனதைக் காணும்போது, சிவபெருமானே உயிர்களின் அனைத்து விதமான இயக்கங்களுக்கும் காரணமாக இருப்பவன் என்னும் உண்மையை எளிதாக உணர முடிகிறது.

இந்தக் கட்டத்தில் சூரபன்மனின் மகன் பானுகோபன், பிரம்மா, விஷ்ணு, இந்திரன் மகன் சயந்தன் உட்பட எல்லாத் தேவர்களையும் சிறைப்படுத்தியதோடு அவர்களைத் தனக்கு ஏவல் செய்ய வைத்தான். இந்திரன் தப்பித்து இந்திராணியோடு பூமிக்கு வந்தான். சிவபெருமானைத் தரிசிக்க முடியாததால், மேருமலைக்குச் சென்று சிவபெருமானை நோக்கி நீண்ட காலம் தவம் செய்தான். சிவபிரான் இந்திரனுக்குக் காட்சி தந்து,  வேள்விக்குத் தலைவனாகிய தம்மைத் தள்ளிவைத்துத் தக்கன் செய்த வேள்வியில் கலந்துகொண்ட பெரும்பாவமே தேவர்களின் துன்பத்திற்குக் காரணம் என்றும்,  தம்மிடம் ஒரு குமரன் தோன்றி சூரனைக் கொன்று தேவரைக் காப்பான் என்றும் கூறி மறைந்தருளினார். காரணம் இன்றிக் காரியம் இல்லை என்றும், ஒவ்வோர் உயிரும் தான் செய்த வினைக்குரிய பயனை அடைந்தே தீர வேண்டும் என்றும்  வலியுறுத்தும் கர்மக் கொள்கை இங்கு நன்கு சித்திரிக்கப்படுள்ளது. இறைவனை மனமுருகி வழிபட்டு, தீய வினைப்பயனைத் தாங்கும் சக்தியைப் பெறுவதுடன், அதனால் பெரும் பாதிப்படையாமல் மீளலாம் என்பது, இந்திரனுக்குச் சிவபிரான் கூறியருளிய கூற்றின்வழி தெளிவாகிறது.

சிவனும் உமையும் நிட்டையில் இருப்பதைக் கண்ட தேவர்கள், பார்வதி கலியாணம் நடந்து, குமரப் பெருமான் தோன்றுவது எப்போது என்று ஏங்கினார்கள். இறைவன் தன் அருட்பார்வையை உயிர்களின் பால் செலுத்தினால் மட்டுமே படைத்தல் முதலிய தொழில்கள் நடைபெறும். தம் அருள் நோக்கை உயிர்கள் பால் செலுத்தித், தன் அருட்சக்தியால் உயிர்களுக்கு அருள் புரியும் நிலையையே, இறைவன் சக்தியை மணம்புரிகிறான் என்று உலக நிலையில் வைத்துக் கூறியுள்ளார்கள் நம் ஆன்றோர்.

இந்திரன், இந்திராணியை வியாழபகவனின் மனைவியிடம் விட்டுவிட்டு, பிரம்மாவிடம் சென்று தன் கவலையைக் கூறினான். பிரம்மன் அவர்களைத் திருமாலிடம் அழைத்துச் சென்றார். விஷ்ணு, பிரம்மன் ஆகிய இருவருமே ஒரே விதமான விளக்கத்தைக் கூறினர். ‘பிள்ளையின் நோய் தீர்க்க அவன் உடலில் கீறு போடவும், அறுவை சிகிச்சை செய்யவும் பெற்றோர் மருத்துவரை அனுமதிப்பது போன்று நம் தீவினையைப் போக்க சூரன் மூலம் நமக்கு நம் கர்மவினைப் பயனை ஊட்டுகிறார் இறைவன்’ என்று விளக்கிக் கூறினர்; மேலும், ‘நமக்கு அருள் புரிவதற்காகவே நாம் அவரை அணுக முடியாதபடி முனிவரோடு யோகத்தில் இருக்கிறார்’ என்றும் கூறினர். தேவர்கள் தமக்குரிய கர்மவினைகளை முழுமையாக அனுபவித்து முடித்தால்தான், இறையருளால் தேவலோக இன்பத்தை நுகருவதற்கும் முத்தி பெறுவதற்கும் தகுதி பெறுவர். எனவே, தேவர்களின் வினைப்பயன் முழுமையாக நீங்கும் வரை அவர்கள் தம்மைப் பார்க்க முடியாத ஒரு சூழலை அமைத்துக் கொண்டார் இறைவன். இறைவனின் ஒவ்வொரு நுணுக்கமான செயலும் ஒரு முக்கிய நோக்கத்துக்காவே மேற்கொள்ளப்படுகிறது. இதை அறிந்தால் உலக வாழ்க்கையைத் தெளிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் நமக்கு ஏற்படும்.

பல உண்மைகளை விளக்கியருளிய திருமால், குமரன் தோன்றுவதற்கு ஏதுவாக இறைவன் மேல் தன் கணையை எய்யுமாறு மன்மதனை ஏவும்படி பிரம்மனிடம் கூறுகிறார். அவ்வாறே செய்வதாகக் கூறிய பிரம்மன் தன்னுடைய மனோவதி நகரை அடைந்தான் என்பதோடு ‘மேரு படலம்’ முடிவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *