கலியுகத் துன்பத்தைத் தீர்க்கவல்ல கந்த புராணம் – 11

‘அடித்தாலும் அணைத்தாலும் நீயே துணை’ என்று திடமாக நின்றால் இறையருள் கிட்டும்!

இமயமலைச் சாரலில் பார்வதிதேவி சிவபெருமானை நோக்கித் தவம் செய்துகொண்டிருந்த போது, ஒரு நாள் முதிய அந்தணர் ஒருவர் அங்குச் சென்றார்; பார்வதி அம்மையாரின் தவத்தைக் காண வந்ததாகக்  தோழிமாரிடம் கூறினார். ஒரு முதியவர் வந்துள்ளதைக் கேள்விப்பட்டதும், அவரை உள்ளே அழைத்து வருமாறு கூறினார் தேவி; தன்னிடம் வந்த முதியவரை ஒரு சிவனடியாராகப் போற்றி, ஓர் ஆசனம் இட்டு அமரச் செய்து, தான் பக்கத்தில் நின்றார். அந்தணர் உமையம்மையை அன்புடன் பார்த்து, மிகச் சிறிய வயதில் உடலை வருத்தித் தவம் செய்வதற்கான காரணத்தைக் கேட்டார். அம்பிகை தன் தோழி விசையையைப் பதில் கூறுமாறு கண்ணால் கூறினார். சிவபெருமான் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் நோக்கத்துடன் அம்மை தவம் இயற்றுகிறாள் என்று விசையை சொன்னவுடன் அந்தணர் சிரித்து, பிரமவிட்டுணுக்களுக்கும் எட்டாத சிவபெருமான் இவளுடைய தவத்துக்கு இரங்கி வருவாரா; வந்தாலும் இவளை மனைவியாக ஏற்றுக்   கொள்ளும் அளவுக்கு அவர் எளியவரா என்று கூறி, உமை தவத்தை நிறுத்துவதுதான் உகந்தது என்று அறிவுறுத்தினார்.

அந்தணர் கூறியதைக் கேட்ட அம்பிகை, சிவனடியார் என்று மரியாதை கொடுத்தால், கொடிய சொற்களைக் கூறுகிறாரே எனக் கோபம் கொண்டு, தன் நாணத்தை விட்டு, “இறைவன் என் தவத்தை ஏற்காவிட்டால், இன்னும் கடுமையாகத் தவம் செய்து உயிர் விடுவேன்” என்று கூறி முதியவரைக் கடிந்துகொண்டார். அன்னைக்கு மேலும் சினமூட்டும் வகையில், சிவனின் ஆடையணிகள், வாகனம் முதலிய அனைத்து அடையாளங்களையும்  கிண்டலாகப் பேசினார் அந்தணர். எவ்விதச் சிறப்பும் இல்லாத சிவன், பர்வதராஜனின் மகளுக்கு எவ்வகையிலும் பொருத்தம் இல்லாதவன்’ என்று பலவாறாகக் கூறினார்.

சிவனின் சொற்களைக் கேட்ட அம்பிகை,‘உன் பொய்க்கோலத்தை மெய்க்கோலம் என்று எண்ணினேனே.  நீ குறிப்பிட்ட ஐயனின் திருக்கோலம், உயிர்களைக் காப்பதற்காக அவன் ஏற்றுக்கொண்ட அடையாளங்கள் ஆகும். உம்மிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை; இங்கிருந்து விரைவில் போய்விடும்’, என்றார். அப்போதும் சிவபிரான் தம் திருவிளையாடலை நிறுத்தவில்லை. அம்மையை மணம்புரிவதற்காகத் தாம் அங்கு வந்ததாகக் கூறினார். ‘நீர் இங்கிருந்து போகாவிட்டால், நான் போகிறேன்’ என்று அம்மை புறப்பட முனைந்த போது, ஐயன் வானத்தில் காளை வாகனத்தின் மேல் தோன்றியருளினார், அச்சமும் நாணமும் கொண்ட அம்மை, தான் அறியாமல் கூறிய நிந்தனைகளைப் பொறுத்தருளுமாறு வேண்டினார். அதற்கு சிவபிரான், “நீ மிகுந்த அன்பால் கூறியவற்றைத் துதியாகக் கொண்டோம்; குற்றம் இருந்தால்தானே மன்னிக்க வேண்டும்,” என்று கூறி, அடுத்த நாளே தாம் அம்மையை மணம் புரிய வருவதாகக் கூறி மறைந்தருளினார்.

இறைவனின் அருள் கிடைப்பதற்கு முன் எந்த உயிரும் பெருஞ்சோதனைக்கு ஆளாகும்.  அம்மையையும் சோதித்தார் இறைவன்; ஆனால், அம்மை இறைவன் அருள்புரியாவிட்டாலும், உயிரையும் பொருட்படுத்தாது தான் இன்னும் கடுமையாகத் தவம் செய்ய முனைந்தார்.   தேவியாரின்  உண்மையான, திடமான அன்புக்கு ஓடோடி வந்தான் இறைவன்.  நம்மால் இத்தகைய வைராக்கிய பக்தியில் நிற்க முடிகிறதா? முடிந்தால் நம் துன்பத்தைத் தீர்த்துக்கொள்ள, இறைவனை விடுத்து,  ஒரு சாமியாரை மட்டுமல்ல, பல சாமியார்களை நாடி ஓடுவோமா?

இறைவன் பல வடிவங்களைத் தாங்குவதால், அந்த வடிவங்களைப் பல வேறு கதைமாந்தர்களாகக் கொண்டு, வாழ்க்கை நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் முறைமைகளைத் தாமே செய்து காட்டும் அரிய வாய்ப்பு ஏற்படுகிறது. உமையம்மையின் தவத்திற்கான காரணத்தை அந்தணர் கேட்டபோது, தேவி தான் விடை சொல்லாமல் தன் தோழியைச் சொல்லுமாறு ஏவுகிறார்; கணவன் பெயரைக் கூறக் கூடாது என்னும் தமிழ்ப் பண்பாட்டை  நிலைநாட்டுகிறார்; மேலும் மணவாளனை பற்றி பேசுவதற்குக் கூட கூச்சப்படும் தமிழ்ப் பெண்களின் பண்பாடும் காட்டப் பட்டுள்ளது. இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு ஒத்துவராத பண்புக் கூறாக இது தோன்றலாம்; ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பைப் புரிந்துகொண்டு, அதைப் போற்றுபவர்களிடம்
இத்தகைய பண்பாட்டை இன்றும் காண முடிகிறது. நாம் இம்மையிலும் மறுமையிலும் நன்கு வாழ வழிகாட்டுபவை புராணங்கள் என்பது உண்மையிலும் உண்மை அல்லவா!