கலியுகத் துன்பத்தைத் தீர்க்கவல்ல கந்த புராணம் – 9
ஆசாபாசமற்ற இறைவனின் ஞானாக்கினி, காதலைத் தூண்டும் மன்மதனையே எரிக்கவல்லது!
கந்தபுராண முதல் காண்டமாகிய உற்பத்திக் காண்டத்தில் நான்காவதாக இடம் பெற்றுள்ள ‘காமதகன
படலத்தில்’ காணப்படும் நிகழ்ச்சிகளையும் அவை நமக்கு உணர்த்தும் அரிய உண்மைகளையும் கண்டு கொண்டிருக்கின்றோம்.
திருநந்தி தேவரின் காவலையும் ஆற்றலையும் கண்டு அஞ்சிய மன்மதன், அவரை வணங்கி, பிரமன் தன்னை அங்கு அனுப்பிய விவரங்களைக் கூறினான். அதைக் கேட்ட நந்திதேவர், சிவபெருமான் மன்மதனைத் தவிர வேறுயாரையும் உள்ளே விடவேண்டாம் என்று தமக்கு ஆணையிட்டுள்ளதை எண்ணிப் பார்த்து, அவனை மேற்கு வாயில் வழியாகச் செல்லுமாறு கூறினார். இதற்கிடையில் இந்திரன் மனோவதி நகருக்குச் சென்று பிரமனை அழைக்கவே, பிரமன் முதலிய தேவர்கள் அனைவரும் அவனுடன் திருக்கயிலைக் குவந்து, ஒரு புறத்தே நின்று சிவபிரானைத் துதித்துக் கொண்டுநின்றனர்.
நந்திதேவரின் அனுமதியோடு சிவபெருமான் இருக்கும் இடத்தை அடைந்த மன்மதன், சிவபெருமானைக் கண்டவுடனேயே அஞ்சி வீழ்ந்தான். இரதிதேவி அவனை எழுப்பினாள். தன் மலர்க்கணையைச் சிவபெருமான் மீது எய்தான், மன்மதன். பூ அம்பு தன் மீதுபட்டவுடன், சிவபெருமான் மன்மதனைச் சிறிதளவு பார்த்தார்; உடனே நெற்றிக்கண்ணின் நெருப்பு அவனைச் சுட்டெரித்தது. கயிலைமலை முழுவதையும் புகை சூழ்ந்தது. புகையைக் கண்ட நந்திதேவர், ‘மன்மதன் எரிந்து விட்டான்; அவன் எரிந்தது நெற்றிக்கண் நெருப்பால் அல்ல; சிவனைத் தன் மலர்க் கணையால் மயக்க எண்ணிய அவன் எண்ணமே (அதாவது அவனது வினையே) அவனைச் சுட்டது என்று கூறி, இரதிதேவியின் வேண்டுதலை ஏற்று மன்மதனை மீண்டும் உயிர்த்தெழச் செய்யும் இறைவனின் கருணையை நீங்கள் காண்பீர்கள்’ என்று தன் கணங்களுக்கு விளக்கிக் கூறினார்.
சிவபெருமான் மன்மதனை எரித்துவிட்டு, மீண்டும் நிட்டையில்ஆழ்ந்தார். இரதிதேவி, எரிந்து சாம்பலாகிய மன்மதனின் வடிவத்துக்கு அருகில் இருந்து பலவாறு அழுது புலம்பினாள். அவளது புலம்பலோடு ‘காமதகனப் படலம்’ முடிகிறது. இந்தப் படலத்தில் பல அரிய உண்மைகள் தெளிவாக உணர்த்தப் பட்டுள்ளன.
மன்மதனைத் தவிர வேறுயாரையும் உள்ளே விடக் கூடாது என்று நந்திதேவரிடம், கூறிய பின்னரே, சனகாதி முனிவர்களுக்கு மெய்யுணர்வை உணர்த்தும் வண்ணம், சிவ பிரான் நிட்டையில் ஆழ்ந்தார் என்று கண்டோம். இறைவன் எல்லாவற்றையும் காரணகாரியத்தோடு செய்கிறான் என்பது இங்கு நன்கு உணர்த்தப்படுகிறது. தேவர்களின் தீவினைப் பயன் முழுமையாகத் தீர்ந்து இறையருளுக்கு அவர்கள் தகுதி பெறும்வரை, அவர்கள் இறைவனைக் காண முடியாத ஒரு சூழலை இறைவன் உருவாக்கிக் கொண்டார். இந்த உண்மையை உணரும் நாமும், நம் துன்பங்கள் தீர்வதற்கேற்ப, பொறுமையுடன், மனம் தளராமல் இறைவனை முழு நம்பிக்கையோடு வழிபட்டவாறு இருந்தால், ‘தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போவது’ போல் நம் துன்பத்தால் பெரிதாகப் பாதிக்கப் படாமல், அதிலிருந்து விடுபடுவோம்.
மன்மதனை ஒரு கதைமாந்தராகக் கொண்டு, ‘முழுமுதற் பொருளாம் இறைவன் ஆசாபாசத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவன்’ என்னும் உண்மையை மிகத் தெளிவாக உறுதிப்படுத்துகிறார் சிவபெருமான். காமத்தைத் தூண்டுவதில் வல்லவனான மன்மதன், இறைவனின் ஞானாக்கினியில் எரிந்து போகிறான். இறைவனிடம் எந்தப் பொருள் நெருங்கினாலும் அதன் எதிர்மறைத் தன்மை அழியுமேயொழிய, இறைவனின் தூயதன்மை என்றென்றும் எள்ளளவும் மாறாது.
நிலையான பேரின்பத்தை நல்கும் முத்திநிலையை அடையப்பெற்ற ஆன்மாக்கள், படைப்பு முதலிய ஐந்தொழில் நடத்தும் ஆற்றல் ஒன்றைத் தவிர, இறைவனுக்குரிய மற்ற தெய்விகக் குணநலன்களைப் பெற்றிருப்பார்கள் என்பது சித்தாந்தக் கொள்கை. சிவபெருமானின் திருமுன் நடந்த நிகழ்ச்சியை வெளியே நின்ற நந்திதேவர் விளக்கிக் கூறியதோடு, அதற்குப்பிறகு நடக்கப் போவதையும் தன் கூட்டத்தினருக்குக் கூறுவதைக் காணும்போது, கால-இடவரையறைகளைக் கடந்து நடைபெறும் அனைத்தையும் உணரும் அவரது தெய்விக ஆற்றலும் முக்காலமும் உணரும் திறமும் வெளிப்படுகின்றன. இத்தகைய தெய்விக ஆற்றலோடு இப்பூவுலகில் வாழ்ந்து சென்ற ஞானிகளைபற்றி நாம் கேட்டும் படித்தும் இருப்போம்.