கலியுகத் துன்பத்தைத் தீர்க்கவல்ல கந்த புராணம் – 1
எல்லா உறுதிப் பொருள்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் கந்த புராணம்!
இந்து சமயத்தில் மகாபுராணம், உபபுராணம், தலபுராணம் எனப் பல வகைப் புராணங்கள் இருந்தாலும், அந்த வகைகள் ஒவ்வொன்றிலும் மிகப் பல புராணங்கள் இருந்தாலும், ஆன்மிகச் சான்றோர்கள், குறிப்பாக சிவபெருமானைப் போற்றும் சான்றோர்கள், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், கந்த புராணம் ஆகிய மூன்றையும் முப்புராணங்கள் என்று சிறப்பித்துக் கூறுவர். பெரியபுராணத்தில் இடம்பெறும் சிவனடியார்களின் பெருமையைப் பலர் பலவாறாகப் போற்றிப் பேசி வருகிறார்கள். திருவிளையாடல் புராணத்தின் பயனைக் கடந்த 66 வாரங்களாகக்கண்டுணர்ந்தோம். மூன்று புராணங்களில் எஞ்சியிருப்பது கந்த புராணம். கந்தப்பெருமான் எப்படி கலியுக வரதன் என்று சிறப்பித்துப் போற்றப்படுகிறானோ, அதேபோல அவன் புகழ்பாடும் கந்தபுராணமும் கலியுக மயக்கங்களையும் குழப்பங்களையும் தீர்த்து, நாம் தெளிவான சிந்தையோடு செம்மை வாழ்க்கை வாழ உதவும்வகையில், தத்துவங்களின் நுணுக்கங்கள் அனைத்தையும் நிகழ்ச்சிகளின் வழியும் கதை மாந்தர்களின் கூற்றுகள் வழியும் தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், கந்த புராணம் ஆகிய மூன்றும் முறையே சிவபெருமானின் வலதுகண், இடதுகண், நெற்றிக்கண் எனப் போற்றப்படுகின்றன. இவ்வாறு கூறுவதற்கான காரணத்தை, www.thevaaram.org எனும் தருமபுர அகப்பக்கத்தில் பன்னிரண்டாம் திருமுறைக்கு எழுதியுள்ள ஆசியுரையில் விளக்கியுள்ளார், ஆதினத்தின் 26ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீல ஸ்ரீஷண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள். அவர் தந்துள்ள விளக்கத்தைப் பார்ப்பது சுவைபயக்கும். சூரிய குலத்தோன்றல்களாகிய சோழர்கள் காரணமாகப் பெரிய புராணம் தோன்றியது; சந்திர குலத்தோன்றல்களாகிய பாண்டியர்கள் வரலாறு கூறுகின்ற முறையில் திருவிளையாடல் புராணம் தோன்றியது; சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய கந்தப்பெருமானுக்காக கந்த புராணம் தோன்றியது. சிவனின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன்; நெற்றிக் கண் நெருப்பு.
”வைரத்தைச் சோதிப்பானுக்குப் பூதக் கண்ணாடி இன்றியமையாது வேண்டப் பெறுவது போல், வேதத்தில் உள்ள நுண்ணிய பொருள்களை விரித்துக் காட்டுவது புராணம் என்று உணர்க” என்று ‘கந்தவேள் கருணை’ எனும் தம் நூலின் முன்னுரையில் கூறுகிறார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். புராணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சமயக் கோட்பாடுகளை விளக்கும் முயற்சியைத் தம் நோக்கமாகக் கொண்டுள்ளன. ‘உண்மையே பேசு’ என்னும் வேத வாக்கியத்தை விரித்துக் கூறுவது அரிச்சந்திர புராணம் என்றும், ‘நன்றி கொன்றவன் விரைந்து அழிவான்’ என்னும் ஒரு பெரிய தருமத்தை விரித்து உணர்த்துவது கந்த புராணம் என்றும் கூறுகிறார் வாரியார் சுவாமிகள்.
“பெரிய புராணம் மனிதன் குறிக்கோளுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறது. திருவிளயாடற் புராணம் மனிதன் பக்தியுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கந்தபுராணம், மனிதன் நன்றியறிதலுடன் வாழ வேண்டும்; இல்லையேல் கடுந்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பதை வலியுறுத்துக் கூறுகிறது” என்று கூறுகிறார் தருமபுர ஆதின 26ஆவது குருமகா சந்நிதானம்.
மனிதன் தன் வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய நன்னெறிக் கொள்கைகளிலும் புரிந்துகொள்ள வேண்டிய சமயக் கொள்கைகளிலும், சிலவற்றை எடுத்துக்கொண்டு, அவற்றை பாமரமக்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதியவைக்கும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு எழுந்தவையே புராணங்கள் என்கின்ற உண்மை நாம் கண்ட அருளாளர்கள் வாக்கால் மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது.
எளிதில் புரிந்துகொள்ள முடியாத நுண்ணிய உண்மைகளில் குறிப்பிட்ட சில வற்றை எடுத்துக்கொண்டு விளக்கும் முயற்சி பல புராணங்களின் இயல்பாகக் காணப்பட்டாலும், ஒருவித முழுமையையும், நுண்ணிய உண்மைகளை மிகவும் நுண்மையாகவும் தெளிவாகவும் விளக்குகின்ற சிறப்பையும், உலகியலுக்கும் ஆன்மவியலுக்கும் பயன்படும் இருவகைச் சார்புடைய கருத்துகளையும் தெளிவுபட எடுத்துக் கூறுகின்ற ஆற்றலையும் கந்தபுராணத்தில் சிறப்பாகக் காண முடிகிறது. உலகியல் அடிப்படையில், நன்றியறிதலின் இன்றியமையாமையை உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் வலியுறுத்திக் கூறும் கந்தபுராணம் தத்துவ அடிப்படையில் வினைக்கொள்கை செயல்படும் முறைமையையும், உலக அனுபவங்கள் அனைத்துமே காரணகாரிய தொடர்புடன் நடைபெறுகின்றன எனும் உண்மையையும், நிகழ்ச்சிகளின் வழியும் கதை மாந்தரின் கூற்று வழியும் மிகத்தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.