கலியுகத் துன்பத்தைத் தீர்க்கவல்ல கந்த புராணம் – 12
சிவபார்வதி கலியாணம் இடம்பெற்ற சிறப்பிற்குரிய நாள் பங்குனி உத்தரத் திருநாள் ! இமயமலைச் சாரலில் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்துகொண்டு இருந்த பார்வதி அம்மையாரிடம் திருவிளையாடல் புரிந்து, அதன் பின் தாம் அம்மையாரை மணம்புரிய வருவதாகக் கூறி, திருக் கைலாயத்துக்குத் திரும்பிய சிவபிரான், சப்த ரிஷிகளைத் தம் முன்பு வருமாறு நினைத்தார். அவர்கள் பயபக்தியோடு அங்கு வந்து நின்றபோது, இமயமலை அரசனிடம் சென்று, அன்றைய தினத்தில் பார்வதியைத் தமக்கு மணம் செய்து தருமாறு பேசிக்கொண்டு விரைந்து வருமாறு பணித்தார். பர்வதராஜனிடம் சென்ற முனிவர்கள், சிவபெருமானின் திருவுள்ளக் குறிப்பை அவனிடம் தெரிவித்தனர். அதைக் கேட்ட அரசன், எல்லா உலகங்களையும் ஈன்றெடுத்தும் என்றும் கன்னியாய்த் திகழும் தேவியாரை இறைவனுக்கு மணம்புரிந்து கொடுப்பதோடு, தன்னையும் அடிமையாகத் தருவதாகக் கூறினான். அப்போது அருகில் நின்ற அரசியார், முன்பு தக்கன் தன் மகளை மணம் செய்து கொடுத்து வாழ்ந்திருந்த சமயத்தில், சிவபிரான் அவனது தலையைக் கொய்தார் என்னும் செய்தியைக் கூறித் தன் அச்சத்தைத் தெரிவித்தாள். சிவபிரானை அழைக்காமல் வேள்வி செய்து சிவனை அவமதித்ததால், அவன் தண்டிக்கப்பட்டான் என்று கூறிய முனிவர்கள், தம் அடியார்க்கு அறக்கருணை புரிவதும் அல்லாதார்க்கு மறக்கருணை புரிந்து அவர்களைப் பக்குவப்படுத்துவதும் இறைவனின் அருட்குணம் என்று தெளிவுபடுத்தினார்கள். முனிவர்கள் கூறியதைக் கேட்ட அரசி, தன் தவற்றுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, தெய்வத் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தாள். சப்த ரிஷிகள் திருக்கயிலைக்குச் சென்று இறைவனிடம் மலையரசன் திருமணத்திற்கு உடன்பட்டதைத் தெரிவித்ததும், இறைவன் அவர்களுக்கு விடை கொடுத்தார். இமயமலை அரசன், தேவதச்சனை அழைத்து, தெய்வத் திருமணத்திற்கு, நகரம் முழுவதையும் தேவலோக அமராவதியைப் போல் அழகுபடுத்தும்படி கூறினான். தேவதச்சன் தன் மனத்தின் நினைப்பால், நகரை அழகுபடுத்தியதுடன், மணவறை முதல் கொண்டு, தேவர் குழாம் அமர்வதற்கேற்ப மண்டபத்தையும் இருக்கைகளையும் தயார் செய்தான். மலையரசன் பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்க்கும் முனிவர்களுக்கும் தத்தம் மனைவியரோடு திருமணம் காண வருமாறு, தூதர்கள் மூலம் அழைப்பு விடுத்தான். தேவரும் முனிவரும் தாங்கள் இறைவனோடு வருவதாகக் கூறினர். துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி, இந்திராணி, அரம்பையர்கள், முனிபத்தினிமார், சப்த நதிகள் முதலியோர் இமயமலையை அடைந்து, உமாதேவியாரை வணங்கி, அவருக்குத் திருமணக் கோலம் செய்யும் பேறு பெற்றார்கள். மகாமேரு முதலிய எட்டு மலைகள், கடல்கள், நாகங்கள், திக்குயானைகள் முதலிய தெய்விக உயிர்கள் அனைத்தும் அங்கு வந்து சேர்ந்தன. இமயமலை அரசன் தன் சுற்றத்தாரோடு திருக்கைலாயத்திற்குச் சென்று, நந்திதேவரின் அனுமதியோடு, சிவபெருமான் முன்பு சென்று வணங்கி, “உலகமாதாவாகிய உமையம்மையை மணம் புரிந்தருளத் திருவுளம் கொண்டீர்; சோதிட நூலோர் மங்கள நாளாகக் கூறும் பங்குனி உத்தரம் இன்றே ஆகும்; எம்பிரான், இப்போழுதே இமயமலைக்கு எழுந்தருள வேண்டும்” என்று வேண்டி நின்றான். இமயமலை அரசனை முன்னே போகச் சொன்ன இறைவன், தாம் தம் கணங்கள் சூழ அக்கணமே வருவதாகக் கூறினார். கந்த புராண உற்பத்திக் காண்டத்தில், 7ஆவதாகவும் 8ஆவதாகவும் இடம்பெற்றுள்ள ‘மணம் பேசு படலம்’, ‘வரைபுனை படலம்’ ஆகியவற்றில் காணப்படும் விவரங்களையே மேலே கண்டோம். சிவபெருமான், தாம் கலியாணம் செய்வதாகக் காட்டும்போது, அது இறைவன் உயிர்களின் மேல் வைத்த கருணையால், ஐந்தொழிலை மேற்கொள்வதற்காகத் தம் அருளாற்றலை வெளிப்படுத்தி, அதன் வழியாக உலகைப் படைத்துக் காத்து அருளுவதைக் குறிக்கும் தெய்விக நிகழச்சியைச் சுட்டுகிறது என்பதை அடிக்கடி நினைவு கூர்ந்து வருகிறோம். இந்த அரிய தத்துவத்தை உணர்த்துவதோடு, தம்மை வழிபடும் அடியார்கள் உலகியல் வாழ்க்கையைப் பண்பும் பயனும் உள்ள வகையில் வாழ்வதற்காக வகுக்கப்பட்டிருக்கும் சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் சரியாகக் கடைப்பிடித்துப் பயனடைவதற்குத் தாமே புராண வரலாறுகளின் வழி, முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டி அருள் புரிகின்றார் என்றும் உணர்ந்து வந்துள்ளோம். அதற்கேற்ப, மணமகன் தரப்பே முதலில் மணம் பேசும் முயற்சியில் இறங்க வேண்டும் என்றும், அந்த முயற்சியை மேற்கொள்ள மணமகனின் தரப்பில் உள்ள சான்றோர்கள் மட்டுமே செல்வார்களே தவிர மணமகன் செல்வதில்லை என்பதையும் இங்குக் கண்ட விவரங்கள் சித்திரிக்கின்றன.. அதேபோல், பங்குனி உத்தரம் ‘கலியாண விரதம்’, ‘தெய்வத் திருமணங்களுக்கு உரிய நாள்’ என்றெல்லாம் குறிப்பிடப்படும் கருத்தை உறுதிப்படுத்தவும் சிவபெருமானின் திருமணம் துணைநிற்கிறது. |