கலியுகத் துன்பத்தைத் தீர்க்கவல்ல கந்த புராணம் – 8 இறைவனின்றும் பிரிக்க முடியாத அவன் பெருங்கருணையே அவனது சக்தியாக உருவகிக்கப்படுகிறது! நம் சமயக் கொள்கைகளை நன்கு புரிந்துகொண்டு சீராக வாழ விரும்புவோரே! |
இந்து சமயத்தில் காணப்படும் கடவுள் வடிவங்களில் பல, பார்வதி உடனுறை பரமசிவன், இலட்சுமி உடனுறை விஷ்ணு, சிவகுடும்பம் எனக் காட்சி அளிப்பதை நாம் அறிவோம்.
இத்தகைய வடிவங்களைப் பார்க்கும் மற்ற உங்கள் கடவுள் ஆசாபாசம் உடையவரா, குடும்பம் நடத்துபவரா எனப் பல கேள்விகளைக் கேட்டு, இந்து மக்களையே குழப்பி விடுவார்கள். இத்தகைய குழப்பங்களை முற்றாகத் தீர்த்து வைக்கும் வண்ணம் அமைந்துள்ளது இன்று நாம் காணவிருக்கும் ‘காமதகனப் படலம்’. கந்த புராணத்தின் உற்பத்திக் காண்டத்தில் நான்காவதாக இடம்பெற்றுள்ளது இந்தப் படலம். ‘காமதனப் படலம்’ கூறுவதைச் சுருக்கமாகக் காண்போம்.சமயத்தினர்,
மனோவதி நகரை அடைந்த பிரமன், மன்மதன் அங்கு வர வேண்டும் என நினைக்கவே மன்மதன் அங்கு வந்தான்; தன்னை வரவழைத்த காரணத்தைக் கேட்டான். நிட்டையில் இருக்கும் சிவபெருமான் மீது மலரம்பு எய்து அவர் தவத்தைக் கலைக்க வேண்டும் என்று பிரமன் கூறுகிறான். அப்போது மன்மதன் அளிக்கும் பதிலில் சிவபெருமானின் தனித் தெய்விகத் தன்மைகள் குன்றிலிட்ட விளக்கென வெளிப்படுகின்றன. “விஷ்ணு, பிரமன், சந்திரன் போன்ற பல கடவுளரை அவரவர் சக்திகளிடம் ஈடுபடச் செய்தது, அகத்தியர், காசிபர், கௌதமர் போன்ற பல முனிவர்களின் தவ வலிமையைக் கெடுத்தது எனப்பட்ட பலப்பல சாதனைகள் என் மலர்க்கணையால் செய்யப்பட்டது போல் தோன்றினாலும், அவையெல்லாம் ‘பிறரின் உதவி எதுவும் தேவை இல்லாமல் தன்வயமாய்த் திகழும்’ சிவபெருமானது சக்தியினால் மட்டுமே நடைபெற்றன. புஷ்ப பாணம், கரும்பு வில் அனைத்துமே சிவபிரானாலேயே அருளப்பட்டன. ஒளிவடிவாய் விளங்கும் சிவபிரான் மீது மலர் அம்பை எய்தாலும் அது பயனற்றுப்போகும். நெருப்பு வடிவாக உள்ள சிவனின் கையிலும் தீ, கண்ணிலும் நெருப்ப; சிரிப்போ முப்புரத்தை எரித்தது”, என்று தன் அண்ணன் பிரமனிடம் கூறிய மன்மதன் ‘தழல்மயமாய் விளங்கும் சிவனை நோக்கி மலர்க் கணையை எய்துவிட்டுத் தான் உயிரோடு மீள முடியுமா’ என்று கூறி கைலை மலைக்குச் செல்ல மறுக்கிறான்.
மன்மதனின் கூற்றிலிருந்து, உயிர்களுக்கு ஐம்புலன் முதலிய கருவிகளோடு கூடிய உடலையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும், உலகத்தையும் கொடுத்து, அவற்றின் உள்ளிருந்து இயக்குபவன் இறைவனே என்னும் உண்மை சுட்டப்படுகிறது; மேலும், சிவபிரான் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட நெருப்பாய் விளங்குபவர் என்பதும் வெளிப்படுகிறது. தொடர்ந்து, “ஆதிகாலத்தில் உலகத்தைப் படைக்கும் பொருட்டுத் தம்மோடு பிரிவில்லாத அருளாற்றலையே தமது மனைவியெனத் தாமாக இருத்தியருளிய பெருமானை நானா மயல் செய்வது?” என்று மன்மதன் கேட்கும் கேள்வி சிவசக்தி வடிவத்தின் உண்மையான நுண்பொருளைத் தெள்ளத் தெளிவாய் உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது. சிவபிரான் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவர் எனும் உண்மை மேலும் உறுதிப்படுத்தப்படுவதைத் தொடர்ந்து காண்போம்.
சிவபிரானிடம் செல்ல அஞ்சி மன்மதன் மறுத்தபோது, ‘துன்பத்தில் இருப்பவர்கள் உதவி கேட்கும்போது தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு உதவி புரிபவனே அறநெறியில் நிற்பவன்; அவ்வாறு செய்யாதவன் பாவம் செய்தவன் ஆவான்’ என்று பல சான்றுகளோடு வலியுறுத்திக் கூறுகிறார் பிரமன். அப்போதும் சிவனிடம் செல்லுவதற்கு மன்மதன் தயங்கவே, தன் சொல்லைக் கேட்டுச் சிவபிரானிடம் செல்லவிட்டால் தான் சாபமிடப் போவதாக அச்சுறுத்துகிறார் பிரமன். பிரமனால் சபிக்கப்படுவதை விட சிவபிரானின் கோபத்தால் இறப்பது சிறப்பு என்றெண்ணி, இரதிதேவியோடும் தன் கூட்டத்தினரோடும் கையிலை மலையை நோக்கிச் சென்றான் மன்மதன்.
அங்குச் சென்றதும், இரதிதேவியோடு மட்டும் கைலை மலையில் ஏறினான்; ஏறும்போது, வழியிலிருந்த பறவைகள்மீதும் விலங்குகள் மீதும் மலர்க்கணையை விடுத்து காம இச்சையைத் தூண்ட முயன்றான்; அவன் எண்ணத்தைக் கிழக்குக் கோபுர வாயிலில் இருந்த நந்திதேவர் உணர்ந்து, “உம், உம்” என்று கோபமாக ஊங்காரம் செய்யவே மன்மதனின் அம்புகள் பறவைகள் மீதும் விலங்குகள் மீதும் செல்லாமல் ஆகாயத்திலேயெ தடைப்பட்டு நின்றன. இறைவனின் காவலரிடமே மன்மதனின் எண்ணம் நிறைவேறவில்லை என்றால், தலைவராகிய சிவபிரானிடம் நிறைவேறுமா? என்ன நடந்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.