12 மே 2021-
இன்று (12.05.2021) முதல் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்றாவது நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில் ஆலயங்கள் வழிப்பாட்டுக்குத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஆலயத்தில் திருமணங்களை நடத்த அனுமதி இல்லை என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
மே 12ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் எம்.சி.ஓ. 3.0-வில் ஆலயங்கள் திறப்பது குறித்து தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர், மலேசிய இந்து சங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ஆலயங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் பின்னர், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் ஆலயங்கள் வழிப்பாட்டுக்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பெரிய ஆலயங்களில் 50 பேரும் சிறிய ஆலயங்களில் 20 பேரும் வழிப்பாட்டில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆலயத்தில் மைசெஜாத்ரா செயலி அல்லது வருகை பதிவு புத்தகம், முகக்கவரி, கைத்தூய்மி பயன்பாடு, ஒரு மீட்டர் தூர இடைவெளி, ஆலயத்தை தூய்மை செய்தல் போன்ற இதர செயல்பாட்டு தர விதிமுறைகளை (எஸ்.ஓ.பி) கட்டாயம் பின்பற்றப்படுவதை ஆலய நிர்வாகங்கள் உறுதிச் செய்ய வேண்டும். இக்காலக்கட்டத்தில் சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளலாம். ஆனால், பெரிய அளவில் திருவிழா நடத்த முடியாது.
அதேவேளையில், ஆலயத்தில் பாரம்பரிய முறையில் திருமணம் நடத்த அனுமதி இல்லை. துணை பதிவதிகாரி கொண்ட ஆலயம் எனில், பதிவுத் திருமணம் செய்ய மட்டுமே அனுமதி உள்ளது. இதில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு: எதிர்வரும் 26.05.2021ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. மாலை 5.45 மணிக்கு தொடங்கி இரவு 8.52 மணி வரை முழு சந்திர கிரகணம் நிகழும். எனவே, மேற்குறிப்பிட்ட காலத்தில் ஆலயங்கள் திருக்காப்பு இட வேண்டும். சந்திர கிரகணம் முடிவுற்றப் பின்னர் அன்று அல்லது மறுநாள் ஆலயத்தைச் சுத்தம் செய்து பூஜைகளைத் தொடரலாம் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.