சமயத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முறியடிக்க ஒன்றுபடுவோம்!

18.02.2021-

மலேசிய நாட்டின் ருக்குன் நெகாரா கோட்பாடுகளின் முதன்மையானது ‘இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்’ என்பதே. ஆனால் இதற்கு எதிரான சமய மறுப்பு கொள்கையை அடிப்படையாக கொண்ட தமிழ்நாட்டின் திராவிடத்திற்கு ஆதரவாகவும் சமய எதிர்ப்பாளர் ஈ.வே.ராமசாமிக்கு ஆதரவாகவும் பத்திரிகையிலும் சமூக ஊடகங்களிலும் பேசி வருபவர்களுக்கு எதிராக உள்துறை அமைச்சும் அரசாங்கமும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் கேட்டுக் கொண்டார்.

மலேசியா நாடு, சமயத்தை முன்னிருத்தி வழிநடத்தப்படும் நாடாகும். இங்கு சமய மறுப்பு என்பது நாட்டின் முதல் விதிமுறைக்கு எதிராக நடப்பது போன்றது. அதுமட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து சமயங்களுக்கும் பாதுகாவலராக விளங்கும் மாட்சிமை தங்கிய மாமன்னரை அவமதிப்பதற்கு சமமாகும்.

மூடநம்பிக்கையை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் சமயத்தை எதிர்ப்பதும் அல்லது சமயத்தை வேண்டுமென்றே ‘மறைத்து’ மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று இன்றைய மாணவர்களுக்கு தவறான வழிக்காட்டுதலை வழங்கி கொண்டிருக்கும் திராவிட இயக்கங்கள், தனித்தமிழ் இயக்கங்கள் மற்றும் தமிழ்நாட்டு நாம் தமிழர் இயக்கத்தோடு தொடர்பு ஏற்படுத்தி கொண்டு இங்கு இயங்கும் இயக்கங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்ப் பள்ளிகளில் 6 ஆம் ஆண்டு தமிழ்மொழி பாடநூல் வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் திராவிட சிந்தனைகள் சமய நம்பிக்கையை தார்மீகமாக அமல்படுத்தி வரும் மலேசிய நாட்டிற்கு மிகப் பெரிய மிரட்டலாக உருவாகலாம். இந்து சமயத்திற்கு அப்பால் நாட்டில் உள்ள இஸ்லாம்,கிருஸ்துவம்,பௌத்தம் போன்ற சமய நம்பிக்கைகளுக்கும் இது அபாய மணியாகும்.

பெரியார் கொள்கை என்பதன் அடிப்படையே சமய எதிர்ப்பு தான். அதை வேறு வகையில் நியாயப்படுத்தி காட்ட முயற்சித்து கொண்டிருக்கும் ஒரு சில அரசியல்வாதிகள் உட்பட பலரின் வெளிப்படையான செயல் நாட்டின் சமய நல்லிணக்கத்திற்கு இடப்படும் சவாலாகவே மலேசிய இந்து சங்கம் கருதுகிறது.

அதிலும் சில தரப்பினர், இந்த விவகாரத்தைத் திசை மாற்ற ஆதாரம் கேட்பதும் ஆலய உடைப்பு பிரச்சனைகளைப் பற்றி பேசுவதும் என அறிக்கை விடுத்து வருகின்றனர். ஆதாரம் எப்போது தேவையோ, யாரிடம் கொடுக்க வேண்டுமோ அதனை இந்து சங்கம் முறைப்படி செய்யும். அதைப்பற்றி யாரும் ‘கவலைப்பட வேண்டாம்’. தங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விவகாரம் எனில் உடனே ஆலய உடைப்பு விவகாரத்தை முன்னிருத்தி விடும் தலைவர்களே, ஆலய உடைப்பு நேரத்தில் மட்டும் கூச்சல் போட்டு விட்டு பிறகு காணாமல் போய்விடும் சில தலைவர்கள் போல் அல்ல இந்து சங்கம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இன்றைய சமூகம் உண்மை அறிந்து கொள்ளும் சமூகமாக மாறிவிட்டது. போதும் தங்களுடைய வார்த்தை விளையாட்டுகள்.

நாட்டில் உள்ள சமய இயக்கங்களில் ஊடுருவி ஒற்றுமை இல்லாச் சூழலை உருவாக்கி குளிர் காய்ந்து இறை மறுப்புச் சிந்தனைகளைப் பரப்பி வரும் இயக்கங்களுக்கு எதிராக பதிவு பெற்றிருக்கும் எல்லா சமய இயக்கங்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்புவதோடு மட்டுமல்லாமல் உள்துறை அமைச்சின் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்க மலேசிய இந்து சங்கம் அழைப்பு விடுக்கின்றது.

நமது சமய நம்பிக்கைகள், பாரம்பரியம், பண்பாட்டு, கலாச்சாரம் முழுமையாக பாதுகாக்கப்படவேண்டும். புரட்சி, சீர்த்திருத்தம் எனும் நம் நாட்டுக்கு ஒவ்வாத தமிழ்நாட்டு அரசியல் ஊடுருவல்கள் உடனடியாகக் கலையப் படவேண்டுமென மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK

தேசியத் தலைவர்,

மலேசிய இந்து சங்கம்

You may also like...

1 Response

  1. Amie .M says:

    I support on this..Our nation’s utmost core value is faith on god regardless any religion…We have freedom to embrace and practice our religion but I wonder who gave authority to enter dravidien politics into Tamil school?Why pulling TN politics into Malaysian Tamil Education?Most of the Tamils here are Hindhus..Most of the Tamil School students are Hindhus and everyone knw how cruel the TN politics against Hindhus in India and how were they hijacked into our syallabus??Take action immediately to the syllabus writer and publications..Its must be a lesson for those bringing barbaric TN culture into this harmonious country.