பிலவ (கீழறை) தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

08 ஏப்ரல் 2021-

சார்வரி ஆண்டு முடிந்து, எதிர்வரும் புதன்கிழமை ஏப்ரல் 14ஆம் தேதி, மலேசிய நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு மங்களகரமான பிலவ (கீழறை) தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. சித்திரை ஒன்றாம் தேதியான அன்று, சூரியன் பகவான் மகர நவாம்சத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். இவ்வேளையில், மலேசிய இந்து சங்கம் பிலவ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

வாழ்வை நெறிப்படுத்தும் சனாதன தர்மமான இந்து சமயம் வெறும் வழிப்பாட்டு முறையல்ல. அது பரந்து விரிந்த வாழ்வியல் நெறி. இந்து சமயத்தின் தத்துவங்களும் தத்துவ விளக்க கருவியான சடங்கு சம்பிரதாயங்களும் அர்த்தமுடையவை; அறிவியல்பூர்வமானவை.

ஆனால், தன் சுயலாபத்திற்காகவும் கொள்கை பரப்புதலுக்காகவும் இந்து சமயத்தையும் அதன் தத்துவங்களையும் இழிவுப்படுத்தும் வகையில் சில முயற்சிகள் ஆங்காங்கே நடக்கின்றன. அதில் ஒன்று தான், தமிழ்ப் புத்தாண்டின் துவக்கம் சித்திரை முதலாம் தேதியா? அல்லது தை முதலாம் தேதியா? என்ற விவாதம். காலம் தொட்டு சித்திரை ஒன்றாம் தேதி கொண்டாடி வந்த தமிழ்ப் புத்தாண்டினை ஒரு தரப்பு தனது அரசியல் நோக்கத்திற்காக தை ஒன்றாம் தேதிக்கு மாற்ற முயற்சிக்க, அதன் தாக்கம் இன்று மலேசியாவிலும் உணர முடிகிறது.

இதனைக் களையெடுக்க வேண்டுமெனில், நம் சமயம் மற்றும் மொழி மீதான உண்மைதனை நாம் அறிந்து கொள்ளுதல் மிக அவசியமானது. தெளிவான சிந்தனையே, சிறந்த சமுதாயம் அமைய வழி வகுக்கும். அதற்கு பிறக்கவிருக்கும் தமிழ்ப் புத்தாண்டைக் காரணியாக கொண்டு, இதுநாள் வரை கடந்து வந்த பாதையினைச் சீர்த்தூக்கி பார்த்து, தீமைகளைத் தவிர்த்து நன்மைகளை அதிகரித்து வாழ்வில் மேன்மைக் கொள்ள என்ணம் கொள்வோம்.

கடந்த ஒரு வருட காலம், கோவிட்-19 நச்சில் பெருந்தொற்றினால் பெரும் அவதிகளை நாம் கண்டாலும், அது நம்மிடையே மனிதநேயத்தையும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது எனலாம். பிறக்கின்ற புத்தாண்டு, நம் துன்பங்களைக் களையும் நல்மருந்தாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி கொள்வோம்.

புத்தாண்டு அன்று வீட்டினில் மருந்து நீர் தயார் செய்து தேய்த்து குளித்து புத்தாடை அணிவதோடு ஆலயம் சென்று உலக நன்மை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்ளுதல் வேண்டும். பகைமை மறந்து சகோதரத்துவத்தைப் பாராட்டி, புத்தாக்க சிந்தனையுடன் சமய மற்றும் மொழி மீதான ஈடுப்பாட்டை அதிகரித்து, பிறக்கின்ற பிலவ (கீழறை) தமிழ்ப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அனைவருக்கும் மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் மங்களகரமான பிலவ தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.